Published : 08 Jul 2016 10:25 AM
Last Updated : 08 Jul 2016 10:25 AM

உலக மசாலா: இளம் தொழிலதிபர்!

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் 14 வயது வில் டீத், வெற்றி கரமான தொழிலதிபராக உருவாகி இருக்கிறார்! வில் டீத் பெற்றோர் இருவரும் தொழிற்சாலைகளில் மொத்தமாகப் பொருட்களை வாங்கி, விற்பனை செய்து வருகிறார்கள். சிறிய வயதில் இருந்தே தொழிலை நேரடியாகப் பார்த்து வந்த வில் டீத்துக்கும் தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. வில் டீத்தைச் சீனாவுக்கு அனுப்பி, தேவையான பொருட்களை வாங்கி, தொழில் ஆரம்பிக்கும்படி பெற்றோர் உற்சாகப்படுத்தினர். குழந்தைகள் மற்றும் தன் வயதை ஒத்த சிறுவர்களுக்குத் தேவையான பொம்மைகள், விளையாட்டுச் சாமான்கள் என்று 1.68 லட்சம் ரூபாய்க்கு வாங்கி வந்தார். ஒரே வாரத்தில் ஆஸ்திரேலியாவில் 6.75 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டார்! முதல் முயற்சியிலேயே ஒரே வாரத்தில் 5 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டிய வில் டீத்தை நினைத்துப் பெற்றோருக்குப் பெருமையாக இருக்கிறது.

மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது!

பொதுவாக இறைச்சிகளைப் பயன்படுத்தி இனிப்புகள் செய்வதில்லை. ஆனால் துருக்கியில் மட்டும் ‘டவக் காக்சு’ என்ற இனிப்புப் பொருள் பல நூற்றாண்டுகளாகக் கோழி இறைச்சியில் செய்யப்பட்டு வருகிறது. இந்த இனிப்பு புட்டிங்கில் கோழி இறைச்சியே பிரதானம். ஒட்டோமான் பேரரசில் மன்னர்கள் நடு இரவில் இனிப்புச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். புதிதாக வந்த சமையற்காரருக்கு அரண்மனை சமையலறையில் கோழிகளைத் தவிர வேறு உணவுப் பொருட்கள் கிடைக்கவில்லை. பால், சர்க்கரை, கோழி இறைச்சியை வைத்து ஓர் இனிப்பைப் புதிதாக உருவாக்கிவிட்டார். அந்த இனிப்பு அரசருக்கு மட்டுமில்லை, அனைவருக்கும் பிடித்துப் போனது. கோழியால் செய்யப்பட்ட இனிப்பு என்று சொன்னால் மட்டுமே தெரியும். மற்றபடி யாராலும் இதைக் கண்டுபிடிக்கவே முடியாது.

இன்று துருக்கியின் மிக முக்கியமான இனிப்புகளில் ஒன்றாக இருக்கிறது. இஸ்தான்புல்லில் ஓஸ்கோனாக் என்ற உணவு விடுதியில் கடந்த 50 ஆண்டுகளாக இந்த இனிப்புச் செய்யப்பட்டு வருகிறது. ’’3 லிட்டர் பாலில் அரை கிலோ சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் காய்ச்ச வேண்டும். பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளில் இருந்து, எலும்பில்லாத இறைச்சியை எடுத்து, மெல்லியத் துண்டுகளாக நறுக்கி வேக வைக்கவேண்டும். இதைப் பாலில் சேர்த்துக் குளிர வைக்கவேண்டும்.

பிறகு மீண்டும் 20 நிமிடங்கள் அடுப்பில் வைக்க வேண்டும். கலவை கெட்டியாக வரும்போது, உலோகத் தட்டுகளில் ஊற்றி, ஆறிய பிறகு வெட்ட வேண்டும். யார் வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம். ஆனால் எங்கள் சுவைக்கு ஈடாக அதை ஒருவராலும் செய்ய முடியாது. கோழி இறைச்சியால் செய்த இனிப்பு என்றதும் விருப்பம் இல்லாமல் சுவைப்பார்கள். ஆனால் சுவைத்த பிறகு அதன் சுவைக்கு அடிமையாகிவிடுவார்கள்’’ என்கிறார் விடுதியின் உரிமையாளர். இந்த இனிப்பு சமீபகாலமாக உலக அளவில் புகழ்பெற்று வருகிறது.

இறைச்சியிலும் இனிப்பு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x