Published : 28 Nov 2013 05:34 PM
Last Updated : 28 Nov 2013 05:34 PM

போரில் இறந்தோரை கணக்கெடுக்க தொடங்கியது இலங்கை அரசு

உள்நாட்டுப் போரின்போது உயிரி ழந்தவர்கள், காணாமல் போன வர்கள் குறித்தும் சேத மடைந்த சொத்துகள் குறித்தும் கணக்கெடுக்கும் பணியை இலங்கை அரசு வியாழக்கிழமை தொடங்கியது.

போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று சர்வதேச அளவில் நிர்பந்தம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இந்நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது.

நாடு முழுவதும் போரால் பாதிக் கப்பட்ட 14 ஆயிரம் கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்புப் பணியில் 16 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப் படவுள்ளனர்.

இலங்கையில் தமிழ் ஈழம் தனி நாடு கோரி விடுதலைப் புலிகள் அமைப்பினர் 25 ஆண்டுகளுக்கு மேலாக ராணுவத்துடன் போர் புரிந்தனர். 2009-ம் ஆண்டு மே மாதம் போர் முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் தேர்தல் நடைபெற்றுள்ளது.

போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச அமைப்புகள் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து நெருக்கு தலை அளித்து வருகின்றன.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ற பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், போர்க் குற்றங்கள் தொடர்பாக இலங்கை சுதந்திரமான விசாரணையை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நடத்த வேண்டும். இல்லையென்றால், ஐக்கிய நாடுகள் சபையில் இந்த விவகாரத்தை பிரிட்டன் கொண்டு செல்லும் எனக் கூறியிருந்தார். இலங்கை மீதான மனித உரிமை குற்றச்சாட்டு காரணமாக இந்த மாநாட்டில் கனடா, இந்தியா, மொரிஷியஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதமர்கள் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்கள், சேத மடைந்த சொத்துகள் தொடர்பான விவரங்களை சேகரிக்கும் பணியை மேற்கொள்ளப்போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

2 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அரசு அமைத்திருந்த போர் தொடர்பான விசாரணைக் குழு தனது அறிக்கையில், இறந்தவர்கள் பற்றிய கணக்கெடுப்பை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தது. அந்த அறிக்கையின்படி இப்போது தான் கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கை அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

“உள்நாட்டுப் போரின்போது ஏற்பட்ட உயிர் இழப்புகள் குறித்தும் சேதமடைந்த சொத்துகள் குறித்தும் அரசின் புள்ளியியல் துறை சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்படும். 1983-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு மே மாதம் வரை போரில் உயிரிழந்தோர், காணாமல் போனோர், தாக்குதலில் சிக்கி காயமடைந்தோர், உடல் ஊனமுற்றோர், சேதமடைந்த சொத்துகள் குறித்த விவரங்கள் அடுத்த 6 மாத காலத்துக்குள் சேகரிக்கப்படும்” என்றார்.

30 ஆண்டு கால உள்நாட்டுப் போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப் பட்டிருக்கலாம் எனக் கருதப் படுகிறது. குறிப்பாக போரின் இறுதி காலகட்டமான 2009-ம் ஆண்டு மட்டும் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படு கிறது.

சர்வதேச மனித உரிமை அமைப்புகள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்டவை போரின் இறுதிக் கட்டத்தில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக கூறியுள்ளன. இந்த தகவலை சரிபார்க்கும் வகையில் கணக்கெடுப்பு நடத்தப் படுமா என நிர்வாகத்துறை செய லாளர் பி.பி.அபேகூனிடம் செய்தி யாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:

“இந்த விவகாரத்தில் அரசிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து பலரும் பல்வேறு கருத்துகளையும் புள்ளி விவரங்களையும் வெளி யிட்டுள்ளனர். உண்மையான புள்ளி விவரம் எங்களின் கணக்கெடுப்பின் மூலம் தெரியவரும்” என்றார் அபேகூன்.

தகவல்கள் கிடைக்காது

மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை தலைவர் டி.சி.ஏ.குணவர்த்தனா கூறுகையில், “1983-க்குப் பின் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்தோர், சேதமடைந்த சொத்துகள் குறித்த விவரங்கள் நாடு முழுவதும் சேகரிக்கப்படும். அதே சமயம், இந்த கணக்கெடுப்பின் மூலம் முழுமையான தகவல்களைப் பெற முடியாது. அதில் சில சிக்கல்கள் உள்ளன. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் இறந்திருந்தாலோ, நாட்டை விட்டு வெளியேறியிருந்தாலோ, அதைப் பற்றி யாராலும் தகவல் அளிக்க இயலாது” என்றார்.

போர் நடைபெற்ற வடக்கு மாகாணப் பகுதிகளில் மட்டும் கடந்த ஆண்டு கணக்கெடுப்பு நடத்திய இலங்கை அரசு, அங்கு 8 ஆயிரம் பேர் உயிரிழந்ததாகவும், 6,350 பேர் காணாமல் போயிருப்பதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x