

பிரான்ஸில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் சதித் திட்டம் முறியடிக் கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 16 வயது சிறுமி உட்பட 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2015 நவம்பர் 13-ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 230 பேர் உயிரிழந்தனர். கடந்த வாரம் பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்திற்குள் நுழைய முயன்ற தீவிரவாதி கத்தியால் குத்தியதில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயமடைந்தார். அந்த தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
இந்நிலையில் பாரிஸ் மீது மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் மோன்டிபெலியர் நகரில் பதுங்கியிருந்த ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் நேற்றுமுன்தினம் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் 16 வயது சிறுமி ஆவார். அங்கிருந்து ஏராளமான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நான்கு பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.