Last Updated : 07 Feb, 2017 05:57 PM

 

Published : 07 Feb 2017 05:57 PM
Last Updated : 07 Feb 2017 05:57 PM

இரான் மீதான தடைகளுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கியது: அமெரிக்க ஆய்வு அமைப்பு அறிக்கையில் தகவல்

ஐ.நா. விதித்த தடைகளுக்கு ஒத்துழைப்பு தந்து, இரானுடனான வர்த்தகத்தை இந்தியா குறைத்துக் கொண்டதாக அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் தனிப்பட்ட ஆய்வு அமைப்பான சிஆர்எஸ் அந்நாட்டு எம்.பி.க்கள் முக்கிய முடிவுகளை எடுக்க வசதியாக சர்வதேச பிரச்சினைகளை ஆராய்ந்து அது குறித்த அறிக்கைகளை வெளியிடும். அதே சமயம் அந்த அறிக்கைகள் அமெரிக்க நாடாளுமன்றத்தின் அலுவல் ரீதியான அறிக்கையாக கருதப்படாது.

அண்மையில் சிஆர்எஸ் வெளியிட்ட அறிக்கையில் இரான் மீது ஐ.நா. தடை விதித்தபோது அந்நாட்டுடனான பொருளாதார உறவுகளை இந்தியா குறைத்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளது. மொத்தம் 42 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இரானுடன் அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முக்கியமான நாடு. ஐ.நா. அந்நாடு மீது பல்வேறு விதமான பொருளாதார தடைகளை விதித்தபோது, இரானைச் சேர்ந்த பிராந்திய வங்கி அமைப்பை 2010-ல் இந்தியா முடக்கியது. அணு உடன்பாட்டில் இரான் கையெழுத்திட வேண்டும் என்ற நோக்கத்துக்காக இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்தது. இந்தியாவில் உள்ள தனியார் துறைகளும் இரானை சர்ச்சைக்குரிய சந்தையாகவே நோக்கின.

பின்னர் 2012 ஜனவரியில் தன்னிடம் உள்ள 45 சதவீத எண்ணெயை விற்பனை செய்வதற்காக இந்தியாவின் ரூபாயை ஏற்க இரான் ஒப்புக் கொண்டது. மேலும் அந்தப் பணத்தில் இந்தியாவிடம் இருந்து கோதுமை, மருந்துப் பொருட்கள், அரிசி, சர்க்கரை, வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்முதல் செய்தது.

இரானின் எண்ணெய் வயல்களில் முதலீடுகள் செய்வதையும் இந்திய நிறுவனங்கள் படிப்படியாக குறைத்துக் கொண்டன. தற்போது இரான் மீதான தடை நீக்கப்பட்டதால் முதலீடுகள் மேற்கொள்ளும் பணி மீண்டும் தொடங்கப்படலாம்.

ஆப்கானிஸ்தான் வழியாக வர்த்தகம் நடத்துவதற்காக 2015-ல் இரானின் சபஹார் துறைமுகத்தை மேம்படுத்தும் ஒப்பந்தத்தில் அந்நாட்டுடன் இந்தியா கையெழுத்திட்டது. தற்போது அந்தப் பணிகளும் மீண்டும் தொய்வு இல்லாமல் தொடங்கும். 2016, மே மாதத்தில் இந்திய பிரதமர் மோடி இரான் சென்றபோது, அந்த துறைமுகம் சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை நிறுவுவதற்காக 500 மில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்யும் ஒப்பந்தமும் கையெழுத்தானது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x