Published : 02 Nov 2014 01:17 PM
Last Updated : 02 Nov 2014 01:17 PM

உலக மசாலா - உருவம் செதுக்கும் அணில்

அமெரிக்காவில் ஹாலோவீன் கொண்டாட்டங்கள் ஆகஸ்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகின்றன. இதில் பெரிய பறங்கிக்காய்களை வைத்து விதவிதமான உருவங்களை உருவாக்குவார்கள். இதற்கென்று பிரத்யேக கலைஞர்கள் இருக்கிறார்கள். இந்த ஆண்டு செய்த ஒரு பறங்கிக் காய் உருவம் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திருக்கிறது. காரணம், அதைச் செய்தது மனிதர்கள் இல்லை, அணில்! மேஜையில் ஒரு பறங்கிக்காயை வைத்தவுடன், மரத்திலிருந்து ஓர் அணில் ஓடி வருகிறது. தன்னுடைய கூர்மையான பற்களால், வேகமாகப் பறங்கிக்காயைச் செதுக்க ஆரம்பிக்கிறது. இரண்டு கண்கள், மூக்கு, ஒரு வாய் என்று செதுக்கிக் கொண்டிருக்கும்போது, இன்னோர் அணில் வந்து தொந்தரவு செய்கிறது. அதை விரட்டிவிட்டபடியே, தன் வேலையை முடித்துவிட்டு ஓடுகிறது அணில்!

அணிலாரே, இந்தக் கலையை யாருகிட்ட கத்துக்கீட்டீங்கன்னு கொஞ்சம் சொல்லுங்க!

கலிஃபோர்னியாவில் உள்ள ஓர் உணவகத்தில் தினமும் இந்தக் காட்சியைப் பலரும் காண்கின்றனர். வயதான மனிதர் ஒருவர் தினமும் வந்து உணவு மேஜையில் அமர்கிறார். வேண்டியதை ஆர்டர் செய்கிறார். பிறகு தான் கொண்டு வந்த புகைப்படத்தை மேஜையில் வைக்கிறார். அந்தப் புகைப்படத்துடன் பேசிக்கொண்டே, உணவைச் சாப்பிட்டு முடிக்கிறார்! அவரைப் பற்றித் தெரியாதவர்கள் வந்து விசாரித்தால் தன்னுடைய காதல் கதையைச் சொல்லிவிட்டுக் கிளம்புகிறார். 17 வயது பெண்ணாக முதல் முறை தன் மனைவியைச் சந்தித்தார். அதற்குப் பிறகு அந்தப் பெண்ணைப் பார்க்க முடியவில்லை. பல ஆண்டுகள் தேடிக்கொண்டே இருந்தார். ஒருநாள் தன் காதலியைத் தேடும் விஷயத்தை முடி திருத்துனரிடம் சொன்னார். உடனே அவர் போன் செய்து தன் மகளை வரவழைத்தார். அட! அதே பெண். இருவருக்கும் திருமணம் நடந்து, 55 ஆண்டுகள் வரை அழகான காதல் நீடித்தது. 5 ஆண்டுகளுக்கு முன்பு நோயால் மனைவி இறந்த பிறகு, பெரியவர் புகைப்படங்களில் அவருடன் பேசிக் கொண்டிருக்கிறார்.

சின்ன விஷயத்துக்கெல்லாம் டைவர்ஸ் கேட்கிற காலத்தில், பெரியவரின் காதல் எட்டாவது அதிசயமாகத்தான் தெரியும்!

மனிதனின் ஓவிய ஆர்வத்துக்கு ஓர் அளவே இல்லை போலிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள முக்கியமான இயற்கை பூங்காக்களில் சிலர் தங்கள் திறமையைக் காட்டுவதற்காக ஓவியங்களை வரைந்து விடுகின்றனர். ரசாயனம் கலந்த பெயிண்ட்களால் உருவாகும் இந்த ஓவியங்கள், இயற்கைக்குச் சேதத்தை விளைவிப்பதாக இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த பெயிண்ட்களை எளிதாக அழித்துவிடவும் முடியவில்லை என்கிறார்கள்.

பஸ்ல ஆரம்பிச்சு பிரபலமான இடங்கள் வரை பேர் எழுதி வைக்கிறதில் நம்மள அடிச்சுக்க ஆளே இல்ல!

அமெரிக்காவில் வசிக்கும் சாட், நான்கு வயது சிறுவன். இந்தச் சிறுவன் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான். அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். மருந்துகளின் உதவி யோடு அவன் கொஞ்ச காலம் வாழமுடியும். அதற்கான நிதியைத் திரட்டுவதற்காக ஒரு சூப்பர் ஹீரோ தீம் பாடலை உருவாக்கியிருக் கிறார்கள். புற்றுநோயை எதிர்த்துத் துணிச்சலுடன் போராடும் சூப்பர் ஹீரோ சாட் பற்றிய பாடல் அது. இந்தப் பாடல் மூலம் கிடைக்கும் வருமானம் சாட் மருத்துவத்துக்குப் போக, மீதியைக் கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அளிக்க இருக்கிறார்கள். பாடலே தேவையில்லை, சாட் புகைப்படத்தைப் பார்த்த உடனேயே நிதி குவிகிறது.

கேன்சர் அரக்கனிடமிருந்து எப்பொழுது விடுபடப் போகிறது இந்த மனிதச் சமூகம்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x