

கில்ஜித்-பல்திஸ்தான் பகுதியை பாகிஸ்தான் அரசு ஆக்கிரமிப்பு செய்துள்ளது என்று பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆக்கிரப்பு காஷ்மீரை ஒட்டி கில்ஜித்-பல்திஸ்தான் பகுதி அமைந்துள்ளது. கடந்த 1947-ல் அப்பகுதியை பாகிஸ்தான் ராணு வம் ஆக்கிரமித்தது. காஷ்மீரின் ஒருங்கிணைந்த பகுதியான கில்ஜித்-பல்திஸ்தானில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்று இந்தியா நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் அந்தப் பகுதியை பாகிஸ்தானின் 5-வது மாகாணமாக அந்த நாட்டு அரசு கடந்த 23-ம் தேதி அறிவித்தது. இதற்கு கில்ஜித்- பல்திஸ்தான் பகுதி மக்கள் உட்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.இந்த விவகாரம் தொடர்பாக பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஆளும் கன்சர் வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போப் பிளாக்மேன் ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
கில்ஜித்-பல்திஸ்தான் பகுதி இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஒருங்கிணைந்த பகுதி. அந்தப் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது. அப்பகுதி மக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டு வருகின்றன.
கில்ஜித் - பல்திஸ்தான் மக்களின் எதிர்ப்பை மீறி சீனா-பாகிஸ்தான் வர்த்தகச் சாலையை அந்த பகுதி வழியாக பாகிஸ்தான் அரசு அமைத்துள்ளது. சர்வதேச அளவில் இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளதால் சர்ச்சைக்குரிய பகுதியை தங்களது 5-வது மாகாணமாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. கில்ஜித் பகுதியிலிருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும்.
இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் சையது அலி கிலானி, மிர்வாய்ஸ் உமர் பரூக் வெளியிட்ட கூட்டறிக்கையில், பாகிஸ்தான் அரசின் அறிவிப்பு ஏற்கக்கூடியது அல்ல என்று தெரிவித்துள்ளனர்.