

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடந்து வரும் சண்டையில் 2 சிறுவர்கள் தலை துண்டித்து கொல்லப்பட்டதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த சண்டையில், இளைஞர்களுக்கு எதிராக எப்போதும் இல்லாத அளவுக்கு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக யுனிசெப் அமைப்பு கூறுகிறது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: திங்கள்கிழமை நடந்த சண்டையில் 2 சிறுவர்கள் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.அவர்களில் ஒருவர் சடலம் சின்னாபின்னமாக்கப்பட்டது. டிசம்பரில் சண்டை தொடங்கியதிலிருந்து இதுவரை 16 சிறுவர்கள் தலை துண்டிக்கப் பட்டுள்ளதாகவும் 60 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிறுவர்கள், இளைஞர்களை குறி வைத்தே வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது என்று யுனிசெப் அமைப்பின் மத்திய ஆப்பிரிக்க பிரதிநிதி சுலேமாஸ்னி டயாபேட் தெரிவித்தார்.
சிறுவர்களை தாக்குவது சர்வதேச மனித உரிமை சட்டத்தை மீறுவதாகும். இந்த கொடுமை நிறுத்தப்படவேண்டும். மூன்று வாரமாக கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடக்கும் மோதலில் 1000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக் கணக்கானோர் உள்நாட்டிலேயே அகதிகளாகிவிட்டனர். நாட்டில் நடக்கும் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர பிரெஞ்சு மற்றும் ஆப்பிரிக்க படைகள் போராடி வருகின்றன. மத்திய ஆப்பிரிக்க குடியரசானது கிறிஸ்தவர்களை பெரும்பான்மையாக கொண்டது. இப்போது நடக்கும் மோதலால் நாடு பெருமளவு சீரழிந்துள்ளது. மார்ச் மாதத்தில் முஸ்லிம்களின் செலேகா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த போராளிகள் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டு மிஷேல் ஜோ டோ ஜியாவை அதிபராக அமர்த்தினர்.
செலேகா அமைப்பை அதிகார பூர்வமாக ஜோ டோ ஜியா கலைத்தாலும் தன்னை பதவியில் அமர்த்திய போராளிகளை அடக்க முடியாமல் திணறுகிறார். இரு தரப்புமே சிறுவர்களை சேர்ப்பதாக கூறியுள்ள யுனிசெப், அவர்களிடமிருந்து ஆயுதங்களை கைப்பற்றி அவர்களை தாக்குதலிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கோரியுள்ளது. பிரான்ஸிடமிருந்து 1960ல் விடுதலை பெற்ற மத்திய ஆப்பிரிக்க குடியரசில் 5 முறை ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகளும், பல முறை கலவரங்களும் வெடித்துள்ளன. வைரம், தங்கம், எண்ணைய் வளம் மிக்கது இந்த நாடு.