சல்மான் தசீரின் 3-வது ஆண்டு நினைவு அஞ்சலி
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முன்னாள் ஆளுநர் சல்மான் தசீரின் 3-வது ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
2011-ம் ஆண்டு மத நிந்தனை குற்றச்சாட்டின் கீழ் தண்டிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண்ணுக்கு ஆதரவான கருத்தை சல்மான் தசீர் வெளியிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரின் பாதுகாவலர், இஸ்லாமாபாத்தின் போஷ் கோசார் மார்க்கெட் பகுதியில் சல்மான் தசீரை சுட்டுக் கொன்றார்.
அவரது நினைவு தினத்தையொட்டி மார்க்கெட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மிகவும் குறைவான எண்ணிக்கையிலானோரே வந்திருந்தனர். பெண்கள் உரிமைக்ககாகவும், மதச் சுதந்திரத்துக்காகவும் குரல் கொடுத்த சமூக நல ஆர்வலர்கள் பலர் வரவில்லை. அச்சம் காரணமாகவே பலர் இந்த கூட்டத்துக்கு வரவில்லை என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
சல்மான் தசீரின் நண்பர் அலி கிலானி கூறுகையில், “பாகிஸ்தானில் முற்போக்குச் சிந்தனை, மதச்சார்பற்றத்தன்மைக்காக குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் சல்மான் தசீர். முற்போக்குச் சிந்தனை களுக்காக ஊடகங்களில் தங்களின் கருத்துகளை தெரிவித்தவர்கள், விளம்பரத்துக்காகவே அவ்வாறு பேசியுள்ளனர். அவர்கள் யாரும் இந்த அஞ்சலி கூட்டத்துக்கு வராததன் மூலமே அதை அறிந்து கொள்ளலாம்” என்றார். அதே சமயம், லாகூரில் நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
