

தெற்கு சூடானில் ஐ.நா. முகாம் மீது அரசு எதிர்ப்புப் படையினர் 2,000 பேர் அண்மையில் தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கு பணியில் இருந்த ஐ.நா. அமைதிப் படையைச் சேர்ந்த 43 இந்திய வீரர்கள் தீரத்துடன் போரிட்டதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக ஐ.நா. சபை அதிகாரி புகழாரம் சூட்டியுள்ளார்.
தெற்கு சூடானில் அதிபர் சல்வா கிர்க், முன்னாள் துணை அதிபர் ரிக் மசார் ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி உள்நாட்டுப் போராக வெடித்துள்ளது.
அதிபர் சல்வா கிர்க், திங்கா என்ற பெரும்பான்மை பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். ரிக் மசார், நியூர் என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். கடந்த 15-ம் தேதி முதல் இரு பிரிவினரும் பயங்கரமாக மோதி வருகின்றனர். தெற்கு சூடான் ராணுவத்திலேயே இனரீதியாக பிளவு ஏற்பட்டுள்ளது. நியூர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த தளபதி ஜெனரல் பீட்டர் கேடட் தலைமையில் அரசு எதிர்ப்புப் படையினர் அணிதிரண்டு போரிட்டு வருகின்றனர். முக்கிய எண்ணெய் வயல்கள், சில நகரங்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்நிலையில் கடந்த 19-ம் தேதி தெற்கு சூடானின் அகோபா நகரில் உள்ள ஐ.நா. முகாமை சுமார் 2000-க்கும் மேற்பட்ட அரசு எதிர்ப்புப் படை வீரர்கள் சுற்றி வளைத்தனர். அந்த முகாமில் திங்கா பழங்குடி இனத்தைச் சேர்ந்த அகதிகள் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
திடீரென முகாமை சுற்றி வளைத்த எதிர்ப்புப் படையினர் நாலாபுறமும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அப்போது ஐ.நா. அமைதிப் படையைச் சேர்ந்த 43 இந்திய வீரர்கள் மட்டுமே முகாமில் பாதுகாப்புப் பணியில் இருந்தனர்.
சுமார் 2,000 பேர் முகாமை சுற்றி வளைத்தபோதும் அஞ்சாத 43 இந்திய வீரர்களும் நெஞ்சுறுதியுடன் இறுதிவரை போரிட்டனர். இதில் தர்மேஷ் சங்வான், குமார் பால் சிங் ஆகியோர் உயிரிழந்தனர். மண்டல் சாபுல் என்பவர் நெஞ்சில் குண்டுபாய்ந்து படுகாயமடைந்தார். 11 அகதிகள் உயிரிழந்தனர். சண்டை நடந்தபோது முகாமில் நூற்றுக்கணக்கான அகதிகளும் ஐ.நா. சபை ஊழியர்களும் இருந்தனர். அவர்களைப் பாதுகாக்க இந்திய வீரர்கள் உயிரைப் பணயம் வைத்து போரிட்டனர். இதனால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
உயிரிழந்த ஐ.நா. அமைதிப் படை வீரர்களுக்காக தெற்கு சூடானின் ஜூபா நகரில் சனிக்கிழமை அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய ஐ.நா. தூதர் ஹிட்லி ஜான்சன், இந்திய வீரர்களின் தியாகத்தை வெகுவாகப் புகழ்ந்தார். இந்திய வீரர்கள் தீரத்துடன் போரிடாவிட்டால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்று அவர் கூறினார்.