

பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் அமெரிக்க ராணுவம் நேற்று நடத்திய ஆள் இல்லா விமானத் தாக்குதலில் 4 தீவிரவாதிகள் பலியாயினர்.
இதுகுறித்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறும்போது, “பழங்குடியினர் வசிக்கும் பகுதியான தட்டா கெல் என்ற இடத்தில் தீவிரவாதிகளை குறிவைத்து ஆள் இல்லா விமானம் மூலம் 2 ஏவுகணைகளை அமெரிக்க ராணுவம் வீசியது. இதில் 4 தீவிரவாதிகள் பலியாயினர். இவர்களை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. எனினும், பலியானவர்களில் சிலர் அல்காய்தா அமைப்புடன் தொடர்புடைய வெளிநாட்டினராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது” என்றனர்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் இருபுறமும் தீவிரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் ராணுவமும் பழங்குடியினர் வசிக்கும் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளைக் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.