

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு மாவட்ட நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திய வம்சாவளி அமெரிக்கர் வின்ஸ் கிர்தாரி சாப்ரியா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்துக்கு அந்நாட்டு செனட் அவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
முன்னதாக, செனட் சபையில் இதுதொடர்பாக நடைபெற்ற வாக்கெடுப்பில் சாப்ரியாவுக்கு ஆதரவாக 58 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து சாப்ரியாவின் நியமனம் உறுதி செய்யப்பட்டது.
தெற்கு ஆசியாவைச் சேர்ந்த ஒருவர் கலிபோர்னியா மாகாணத்தில் மாவட்ட தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதன்முறை. இதன்மூலம் அமெரிக்காவில் பணிபுரியும் தெற்காசியாவைச் சேர்ந்த ஒருசில மாவட்ட நீதிபதிகள் பட்டியலில் இவரும் இணைந்துள்ளார்.
இப்போது இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள சாப்ரியா வெளியிட்டுள்ள அறிக்கை யில், உயரிய பதவியில் தன்னை நியமித்ததற்காக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இப்போது சான் பிரான்சிஸ்கோ நகரின் துணை வழக்கறிஞராக உள்ள சாப்ரியா, நீதிபதி பதவிக்கு தம்மை நியமிக்குமாறு ஒபாமாவிடம் பரிந்துரை செய்த செனட் உறுப்பினர் பார்பரா பாக்சர் மற்றும் நியமனத்தை உறுதி செய்வதற்கான நடைமுறைக்கு ஆதரவும் வழிகாட்டுதலும் அளித்த செனட் உறுப்பினர் பீன்ஸ்டீன் ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
"இந்தியாவுக்கு சென்று கொண்டிருக்கும் போது அமெரிக்கா வின் மாவட்ட நீதிபதியாக நான் நியமிக்கப் பட்டதை செனட் சபை உறுதி செய்ததாக தகவல் கிடைத்தது. அந்தத் தருணத்தை என்னால் மறக்க முடியாது" என்று சாப்ரியா தெரிவித்தார்.
கடந்த 1991-ம் ஆண்டு கலிபோர்னியா பல்கலைக்கழகத் தில் பி.ஏ. பட்டம் பெற்ற சாப்ரியா, அதே பல்கலைக்கழகத்தின் போல்ட் ஸ்கூல் ஆப் லா-வில் 1998-ல் சட்டப் படிப்பை (ஜே.டி.) முடித்தார்.
பின்னர் அதே ஆண்டில் அப்போதைய கலிபோர்னியா வடக்கு மாவட்ட தலைமை நீதிபதி சார்லஸ் ஆர்.பிரேயரிடம் எழுத்தராக தனது பணியைத் துவக்கினார் சாப்ரியா. பின்னர் பல்வேறு சட்ட நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.