

சிங்கப்பூரில் தைப்பூச திருவிழா கொண்டாடப்படும் பகுதிகளில் மதுபானத்துக்குத் தடைவிதித்துள்ளது அந்நாட்டு அரசு.தைப்பூசம் கொண்டாடப்படும் லிட்டில் இந்தியா பகுதியில் இன்று மாலை முதல் அடுத்த திங்கள்கிழமை வரை இந்தத் தடை அமலில் இருக்கும்.
டிசம்பர் 8-ம் தேதி லிட்டில் இந்தியா பகுதியில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து முன்பு வார இறுதி நாள்களில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. தமிழகத்துக்கு அடுத்தபடியாக சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 11 மணிக்கு தைப்பூச விழா தொடங்குகிறது. இதை முன்னிட்டு சாமி ஊர்வலமும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பவர்கள் மதுபானம் அருந்தக் கூடாது, புகை பிடிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் தலைவர் கே.சேகரன் கூறியுள்ளார்.