

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற (பிரெக்ஸிட்) அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் உட்பட 28 உறுப்பு நாடுகள் உள்ளன. இதில் இருந்த வெளியேறுவது தொடர்பாக பிரிட்டனில் கடந்த ஜூனில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 52 சதவீத பிரிட்டிஷ் மக்கள் வெளியேற ஆதரவு தெரிவித்தனர். இந்த விவகாரத்தால் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகி புதிய பிரதமராக தெரசா மே பதவியேற்றார். இந்நிலையில் பிரெக்ஸிட் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி ஜினா மில்லர் என்ற பெண் தொழிலதிபர் பிரிட்டிஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள், பிரெக்ஸிட் நடவடிக்கைக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம் என்று உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து பிரெக்ஸிட் வரைவு மசோதாவை அந்த நாட்டு அரசு நாடாளுமன்ற கீழவையில் அண்மையில் தாக்கல் செய்தது. இந்த மசோதா மீது நேற்று முன்தினம் சுமார் 17 மணி நேரம் விவாதம் நடந்து இறுதியில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
மசோதாவுக்கு ஆதரவாக 498 பேரும் எதிராக 114 பேரும் வாக்களித்தனர். அடுத்த கட்டமாக பிரபுக்கள் அவையில் விவாதித்து வாக்கெடுப்பு நடத்தப்படும். மார்ச் இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் முழுமையாக வெளியேறிவிடும் என்று பிரிட்டிஷ் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.