ஒசாமா பாதுகாவலரை விடுவிக்க அமெரிக்கா முடிவு

ஒசாமா பாதுகாவலரை விடுவிக்க அமெரிக்கா முடிவு
Updated on
1 min read

கியூபாவின் குவாந்தநாமோ சிறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ள ஏமன் நாட்டின் மகமுது முஜாகித் (33) என்ற தீவிரவாதியை விடுதலை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இவர், பாகிஸ்தானில் கொல்லப்பட்ட, அல்காய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடனின் பாதுகாவலராக இருந்தவர்.

கியூபாவின் குவாந்தநாமோ வளைகுடாவில், அமெரிக்க ராணுவத்தின் தடுப்புக் காவல் முகாம் உள்ளது. ஆப்கானிஸ்தான், ஈராக் போர்க் கைதிகளை அடைத்து வைப்பதற்காக, 2002ல் அப்போதையை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் நிர்வாகத்தால் இந்த சிறை ஏற்படுத்தப்பட்டது. இது திறக்கப்பட்ட நாள் முதல் சர்ச்சைக்குரியதாகி வருகிறது. இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதற்கு அதிபர் ஒபாமா 2011ல் உத்தரவிட்டதை தொடர்ந்து, கைதிகள் தொடர்பாக மறு ஆய்வுக் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்புக்கு மகமுது முஜாகித் இனிமேலும் அச்சுறுத்தலாக இருக்க வாய்ப்பில்லை என்பதால் அவரை விடுதலை செய்ய மறு ஆய்வுக்குழு அனுமதி அளித்துள்ளது. இதனை அமெரிக்க ராணுவ தலைமையகம் வியாழக்கிழமை அறிவித்தது.

கைதிகள் பலரின் முறையீடுகளை இக்குழு ஆய்வு செய்துவரும் நிலையில், விடுதலைக்கு அனுமதி அளிக்கப்பட்ட முதல் நபர் மகமுது முஜாகித். இவர் ஆப்கானிஸ்தானில் இருந்த ரகசிய முகாமில் தீவிரவாத பயிற்சி பெற்றுள்ளார். அமெரிக்காவில் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, அல்காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க ராணுவம் தீவிரமாக தேடி வந்தது. அப்போது ஆப்கானிஸ்தானின் டோரா போரா மலைப் பகுதியில் மகமுது முஜாகித் கைது செய்யப்பட்டார்.- பி.டி.ஐ.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in