

பயங்கரவாதத்துக்கு எதிராக பிம்ஸ்டெக் நாடுகளிடையே முழு ஒத்துழைப்பு வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.
வங்கக் கடல் பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், பூடான், மியான்மர், தாய்லாந்து ஆகிய 7 நாடுகளும், பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகான வங்கக்கடல் முன்முயற்சி (பிம்ஸ்டெக்) என்ற பெயரில் கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த கூட்டமைப் பின் 3வது உச்சிமாநாடு மியான்மர் தலைநகர் நே பியி டாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இம் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:
இயற்கைப் பேரிடர் முதல் பயங்கரவாதம்வரை பல்வேறு பொதுவான சவால்களை நமது பகுதி எதிர்கொண்டு வருகிறது. இவற்றுக்கு நாம் ஒருங்கிணைந்து தீர்வு காண்பதன் மூலம் அமைதி, ஒற்றுமை, பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றில் ஆசிய அளவிலும், உலக அளவிலும் நாம் முக்கியப் பங்காற்ற முடியும்.
நமது வளர்ச்சியை போலவே நமது பாதுகாப்பும் முக்கியமானது. இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாது. பிம்ஸ்டெக் நாடுகளில் காணப்படும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு நம்மிடையே வலுவான முழு ஒத்துழைப்பு உடனே தேவைப்படுகிறது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சர்வதேச பயங்கரவாதம், நாடு கடந்து மேற்கொள்ளப்படும் திட்ட மிட்ட குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல் ஆகியவற்றுக்கு எதிரான ஒத்துழைப்புக்கு பிம்ஸ்டெக் நாடுகள் விரைந்து ஒப்புதல் அளிக்கவேண்டும். மேலும் குற்றச் செயல்களுக்கு எதிராக பரஸ்பரம் சட்ட உதவிக்கான ஒப்பந்தம் விரைந்து கையெழுத்திடப்படவேண்டும்.
வர்த்தகம், பொருளாதாரம், சாலைத் தொடர்பு உள்ளிட்ட பல் வேறு துறைகளில் ஒத்துழைப்பதன் மூலம் வளமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்வதுடன் ஒருமைப்பாட்டையும் காக்கமுடியும். பிம்ஸ்டெக் நாடுகள் இடையே பொருள்களுக்கான தடை யற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாகவும், இதனை முதலீடு மற்றும் சேவைகளுக்கு விரிவுபடுத்துவது தொடர்பாகவும் விரைந்து முடிவு எடுக்க வேண்டும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை யில் நம்மிடையே ஒத்துழைப்பு தேவை. நெடுஞ்சாலை, எரிவாயு மற்றும் எண்ணெய் குழாய் மூலம் நம் நாடுகளை இணைப்பதற்கான வாய்ப்பு களை ஆராயவேண்டும். 2015ம் ஆண்டை பிம்ஸ்டெக் சுற்றுலா ஆண்டாக அறிவிக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சி, கலாச்சார பரிமாற்றம் மற்றும் மக்களை இணைப் பதற்கு இது உதவும்.
வானிலை தகவல்களை பரிமாறிக் கொள்வதிலும் நம்மிடம் ஒத்துழைப்பு வேண்டும். டெல்லிக்கு அருகே நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ள பிம்ஸ்டெக் வானிலை ஆய்வு மையம் விரைவில் செயல்படத் தொடங்கும்.
இந்தியாவில் பாரம்பரிய மருத்துவம் பயில விரும்பும் பிம்ஸ்டெக் மாணவர்கள் 30 பேருக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்றார் மன்மோகன் சிங்.