

பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் பட்டியலில் ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் உட்பட 5 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
கடந்த 1998-ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 166 பேர் பலியாயினர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜமாத் உத் தவா (ஜேயூடி) யீத்தின் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரை ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியாவும் கேட்டு வருகிறது. இந்நிலையில், தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி, தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் 4-வது அட்டவணையில் ஹபீஸ் சயீத்தின் பெயரை பஞ்சாப் மாகாணம் சேர்த்துள்ளது. இத்தகவலை பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் ‘டான்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பல்வேறு காரணங்களுக்காக கடந்த மாதம் 30-ம் தேதி முதல் சயீத் வீட்டுக் காவலில் இருந்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சயீத் பெயர் சேர்க்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சயீத் தவிர அவரது நெருங்கிய உதவியாளர் காஸி காஷிப், பைசலாபாத்தை சேர்ந்த அப்துல்லா ஒபைத், மார்கஸ் இ தய்பாவைச் சேர்ந்த ஜாபர் இக்பால், முரிடிகேவைச் சேர்ந்த அப்துல் ரகுமான் அபித் ஆகியோரின் பெயர்களும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜமாத் உத் தவா மற்றும் பலா இ இன்சானியத் (எப்ஐஎப்) ஆகிய அமைப்புகளின் பெயரில் தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு பஞ்சாப் மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக ஜேயூடி மற்றும் எப்ஐஎப் அமைப்புகளை சேர்ந்த சயீத் உட்பட 37 பேரின் பெயர்கள் நாட்டை விட்டு வெளியேற கட்டுப்பாடுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது தீவிரவாத தடுப்பு சட்டத்தின் 4-வது அட்டவணையில் சயீத் உட்பட 5 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டதால், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.