

லண்டனில் நர மாமிசம் விற்கப்படுவதாக ஃபேஸ்புக்கில் பரப்பப்பட்ட புரளியால் இந்திய உணவு விடுதி ஒன்று மூடப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரிட்டன் தலைநகர் லண்டனின் தென் கிழக்கு பகுதியில், 'கரி ட்விஸ்ட்' (KARRI TWIST) என்ற உணவு விடுதியை நடத்தி வருகிறார் இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட ஷின்ரா பேகம்.
இந்த நிலையில் கரி ட்விஸ்ட் உணவு விடுதியில் நர மாமிசம் விற்கப்படுவதாக புரளி பரவியதால் பேகம் தனது விடுதியை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஷின்ரா பேகம் கூறும்போது, "கரி ட்விஸ்ட் உணவு விடுதியில் நர மாமிசம் விற்கப்படுவதாக ஃபேஸ்புக்கில் பரப்பப்பட்ட புரளியால், பொதுமக்கள் பலர் எங்கள் உணவு விடுதியை தாக்கப்போவதாக மிரட்டல் விடுகின்றனர். சிலர் எங்கள் உணவு விடுதி குறித்து போலீஸாரிடமும் புகாரும் அளித்துள்ளனர்.
இந்த பொய்யான செய்தியால் எங்கள் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எப்படி நர மாமிசத்தை விற்பீர்கள் என்று போனில் மிரட்டல் விடுகின்றனர்.
இந்த செய்தியை பலர் உண்மை என்று நம்புகின்றனர். நாங்கள் 60 வருடமாக இந்த உணவு விடுதியை நடத்தி வருகிறோம். இந்தப் பொய்யான செய்தியால் தற்போது இதை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்தத் துன்பம் னக்கு நேரவில்லை என்றால் இதனை நினைத்து நிச்சயம் சிரித்திருப்பேன்.
எங்களுடைய உணவு விடுதி பற்றிய வந்த செய்தியில், ஏராளமான பிழைகள் இருந்தன ஆனால் அதை மக்கள் நம்புகின்றனர்" என வருத்தமாக பேசினார்.
கரி ட்விஸ்ட் உணவு விடுதி பற்றி வெளியான பொய் செய்தி விவரம்:
" நர மாமிசம் விற்றதாக இந்தியாவைச் சேர்ந்த உணவு விடுதி உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 9 மனித உடல்கள் உறைந்த நிலையில் சமைப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. அந்த விடுதியின் உரிமையாளர் தற்போது போலீஸ் நிலையத்தில் உள்ளார். இதனால் அந்த உணவு விடுதி மூடப்பட்டுள்ளது" என்று கூறப்படுள்ளது.