

பாகிஸ்தானில், லாகூரில் இந்திய உணவு விடுதி அருகே குண்டு வெடித்ததில் 8 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 21 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனார்.
குண்டுவெடிப்புத் தாக்குதல் பாம்பே சவுபாத்தி என்ற இந்திய உணவகத்துக்கு அருகே கட்டுமானத்தில் உள்ள கட்டிடம் அருகே நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 8 பேர் பலியானதோடு 21 பேர் காயமடைந்துள்ளனர், இவர்கள் பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதில் 4 பேர் உடல் நிலை கவலைகிடமாக இருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் இந்தத் தாக்குதலில் 12 மோட்டார் வாகனங்கள் உட்பட 16 வாகனங்கள் உருத்தெரியாமல் சேதம் அடைந்துள்ளது.
பெரிய அளவில் போலீஸ், ராணுவம், உளவுத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர், அந்த இடம் பாதுகாப்பு வலையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு குண்டுகளை வெடிக்கச் செய்யும் டைமர் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். ரிமோட் கண்ட்ரோல் மூலமாக வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் நயாப் ஹைதர் தெரிவித்தார்.
இந்தக் குண்டுவெடிப்புக்கு இன்னமும் எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.