

தென் கொரியாவில் கடந்த செவ்வாய்கிழமை நேரிட்ட படகு விபத்தில் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. 244 பேரின் நிலை என்னவென்றே தெரியவில்லை. இந்த நிலையில் இந்த விபத்து ஒரு திட்டமிட்ட கொலைக்கு ஒப்பாகும் என்று தென் கொரிய அதிபர் பார்க் குன் ஹையி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தென் கொரிய அதிபர் பார்க் குன் ஹையி கூறுகையில், "தென்கொரிய கப்பலின் கேப்டன் மற்றும் சில குழு உறுப்பினர்கள் ஈடுபட்ட நடவடிக்கைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளது. இது திட்டமிட்ட கொலைக்கு ஒப்பாகும். எனது மனதை மட்டும் அல்லாமல் தென் கொரிய மக்கள் அனைவரின் மனதையும் இந்த விபத்து துளைத்துவிட்டது. இங்கு இருக்கும் பயணிகள் அனைவரின் மன நிலையும் ஒன்றாகவே இருக்கிறது.அதில் கோபமும் அதிர்ச்சியும் தான் இருக்கிறது.
இந்த விபத்துக்கு முழு பொறுப்பு கப்பலின் நிர்வாகம் மட்டும் தான் என்பது தெளிவாக இருக்கிறது. பாதுகாப்பின்மை குறைப்பாடுகளே இந்த பேரழிவுக்கு காரணம். இதற்கு சட்டபூர்வமான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்” என்று பேசினார்.
சியோல் அருகே உள்ள இன்சியோன் துறைமுகத்திலிருந்து சீவொல் கப்பல் செவ்வாய்க்கிழமை புறப்பட்ட போது திடீரென கப்பல் மூழ்க ஆரம்பித்தது. உதவி கோரி இந்தப் கப்பலில் இருந்து சிக்னல் அனுப்பப்பட்டது. உடனே, 100 கடலோர காவலர்களும், கடற்படை கப்பல்களும், மீன்பிடி கப்பல்களும், 18 ஹெலிகாப்டர்களும் விரைந்து வந்து 15 பள்ளி மாணவர்கள் உள்பட 179 பேரை உயிருடன் மீட்டனர்.
இதில் 300-க்கும் மேற்பட்டவர்கள் சுற்றுலா சென்ற மாணவ - மாணவிகள் ஆவர். தற்போது வரை இவர்களில் 58 பேரது உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளது.
கப்பலின் கேப்டன் லீ கைது செய்யப்பட்டுள்ளார். கப்பல் விபத்துள்ளாகும் முன்னரே லீ கப்பலை விட்டு தப்பிவிட்டார் என்பதால், அவர் மீது பணியில் அலட்சியமாக இருத்தல், கடல்சார் சட்டங்களை மீறுதல் உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
கப்பலின் உள்ளே இருக்கும் பயணிகளின் உடல்களை மீட்கும் பணி மிகவும் சிரமமான நிலையில் உள்ளது. மீட்பு பணியில் ஆழ் கடல் நீச்சல் வீரர்கள் உட்படுத்தப்பட்டுள்ளனர். 480 அடி நீளமும், 6,586 டன் எடையும் கொண்ட இந்த கப்பலின் உள் பகுதிக்கு 40 ஆழ்கடல் வீரர்கள் சென்றுள்ளனர். எனினும் வானிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள இருள் சூழல் காரணங்களால் பயணிகளை மீட்கும் பணி மிகவும் சிரமமாக உள்ளது.