

சிரியா அகதிகளின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டிவிட்டது என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
சிரியாவில் ஷியா, சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கு இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அந்த நாட்டு அதிபர் ஆசாத், ஷியா பிரிவைச் சேர்ந்தவர். அவருக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் போரிட்டு வருகின்றன.
மேலும் சன்னி பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகளும் சிரியாவின் பெரும் பகுதியைக் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதனால் சிரியாவில் பலமுனை உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய ராணுவம் அங்கு முகாமிட்டு போரில் நேரடியாக ஈடுபட்டு வருகிறது. சில கிளர்ச்சிக் குழுக்களுக்கு அமெரிக்கா மறைமுகமாக ஆதரவு அளித்து வருகிறது. அதேநேரம் அமெரிக்க கூட்டுப் படைகள் ஐ.எஸ். தீவிரவாத முகாம்கள் மீது வான்வழி தாக்குதலையும் நடத்தி வருகிறது.
இதனால் உயிருக்கு அஞ்சி சிரியாவை விட்டு அகதிகளாக வெளியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அண்டை நாடான துருக்கியில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சிரியா மக்கள் அகதிகளாக வாழ்கின்றனர். லெபனானில் 10 லட்சம் பேரும், ஜோர்டானில் 6,57,000 பேரும், ஓமன், இராக், எகிப்து, வடஆப்பிரிக்க நாடுகளிலும் சிரியா மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
இவர்கள் தவிர ஆயிரக்கணக் கானோர் ஐரோப்பிய நாடுகளிலும் குடியேறி உள்ளனர். அவர்களில் பலருக்கு இன்னமும் அகதி அந்தஸ்து வழங்கப்படவில்லை.
இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் சிரியா அகதிகளின் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டிவிட்டது. அவர்களுக்கு சர்வதேச நாடுகள் தாராளமாக உதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.