

இந்தியாவுடனான நல்லுறவை வலுப்படுத்த தான் உறுதிபூண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஒபாமா இவ்வாறு கூறினார். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைக்கும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஒபாமா உறுதியளித்துள்ளார். ஆசிய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் பெரிய சக்தியாக இந்தியா விளங்கிவருவதாகவும் ஒபாமா பாராட்டினார்.
ஜம்மு காஷ்மீரில் சில தினங்களுக்கு முன்னர் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கண்டனம் தெரிவித்தார். அப்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கூடாரமாக இருப்பதாக கூறிய பிரதமர் மன்மோகன்சிங்கிடம், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிராக தாக்குதல் நடத்தி வருவது குறித்து பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப்பிடம் வெளிப்படையாக பேச இருப்பதாகவும் உறுதியளித்தார்.
ஒரு மணி நேரம் நடைபெற்ற சந்திப்புக்கு பிறகு ஒபாமாவும், மன்மோகன்சிங்கும் கூட்டறிக்கை வெளியிட்டனர். அப்போது, வறுமை ஒழிப்பு, உணவு பாதுகாப்பு, இயற்கை வளங்களை பாதுகாப்பது, சர்வதேச அமைதியை நிலைநாட்டுவது போன்ற துறைகளில் இந்தியா- அமெரிக்கா இணைந்து செயல்பட வேண்டும் என இரு நாட்டு தலைவர்களும் தெரிவித்தனர். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர உறுப்பினர் பதவி கிடைக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக ஒபாமா கூறினார்.