

ஒரு பெரும் கந்தரகோலத்தை நிகழ்த்திக் காட்டாமல் இந்த நவாஸ் ஷெரீஃப் ஓயமாட்டார் போலிருக்கிறது. தலிபான்களின் சமீபத்திய மனித வெடிகுண்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புறப் பிராந்தியமான வஜிரிஸ்தானின் வடக்குப் பக்கத்தில் விமானத் தாக்குதலுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
இது எப்போது ஆரம்பித்தது என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் கடந்த இரண்டு மூன்று தினங்களில் பல ஆயிரக்கணக்கான வஜிரிஸ்தான் மக்கள் விமானத் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் இடம் பெயர்ந்து போகத் தொடங்கியிருக்கிறார்கள். தலிபான்களைத் தேடி அழிக்கிறேன் பேர்வழியென்று பஷ்டூன் ஆதிவாசிகளின் குடியிருப்பில் ராணுவம் நிகழ்த்தும் இந்த கோரத் தாக்குதல், அந்தப் பிராந்தியத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
குறைந்தது எழுபதாயிரம் பேர் தத்தமது வீடுகளை காலி செய்துவிட்டுப் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பது ஒரு தரப்புத் தகவல். அவ்வளவெல்லாம் இல்லை; வெறும் பன்னிரண்டாயிரம் பேர்தான் என்பது இன்னொரு தரப்பு. இந்தத் தாக்குதலில் பஷ்டூன்கள் பாதிக்கப்படவேயில்லை; தஜிக்குகளும் உஸ்பெக்குகளும்தான் அடிவாங்கியிருக்கிறார்கள் என்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள். எந்த பாகிஸ்தான் செய்தி நிறுவனமும் உண்மை நிலவரம் சொல்லுவதில்லை. உண்மை என்னவெனில் நடக்கிற சங்கதி அவர்களுக்கே முழுசாகத் தெரியாது.
மிகக் கவனமாக வஜிரிஸ்தானில் நடக்கிற தாக்குதல் குறித்த செய்திகள் வெளியே வராதவாறு பார்த்துக்கொண்டு தாக்குதலைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது பாகிஸ்தான் ராணுவம்.
சந்தோஷம். இதன் எதிர்வினை எத்தனை மோசமாக இருக்கும் என்பது ஷெரீஃபுக்குத் தெரியாதா? எல்லையோர பஷ்டூன்கள் தலிபான் களின் பங்காளிகள். அவர்களை வாழவைத்துக்கொண்டிருப்பதே இவர் கள்தாம். இப்படி கொத்துக் கொத்தாக அவர்களை அழித்தொழிப்பது தலிபான் களை மேலும் கோபப்படுத்தி, இன்னும் பல சர்வநாச கைங்கர்யங்களுக்கே இட்டுச் செல்லும். ஒரு பக்கம் அமைதிப் பேச்சுக்கு வாருங்கள் என்று அழைத்துக்கொண்டு, இன் னொரு பக்கம் இதென்ன அக்கிரமம்?
யார் கேட்பது? பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்காவை அவ்வப்போது சோப்பு போட்டுக் குளிப்பாட்டி சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டிய இருப்பியல் நெருக்கடி இருக்கிறது. அமெரிக்க உதவி பத்தாமல் இன்னும் பல தேசங்களில் இருந்தும் நிவாரண உதவிகளைக் கேட்டுப் பெற என்னவாவது ஒரு காரணம் வேண்டியிருக்கிறது.
எளிய டார்கெட், இந்த பஷ்டூன் பழங்குடி மக்கள். வீடிழந்த, வாழ்க்கை இழந்த இந்த அபலைகளைப் பாரீர், பாரீர். இவர்களின் புனர்வாழ்வுக்கு என்னவாவது செய்ய வக்கற்றுப் போய் கையேந்தி நிற்கும் பாகிஸ்தான் அரசின்மீது கருணை வைப்பீர். நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர். நிதி குறைந்தவர் காசுகள் தாரீர். ஆண்மையாளர்களின் உழைப்பும் அதுவுமற்றவர் வாய்ச்சொல்லும் அவசியமில்லை.
பச்சையான அயோக்கியத்தனம் என்று சீறிக்கொண்டிருக்கிறது மத்தியக் கிழக்கு முஸ்லிம் சமூகம். பாகிஸ்தான் அரசின் இரட்டை வேடம் கலையும் நாள் வெகு தூரத்தில் இல்லை. அமெரிக்காவின் ஆதரவையும் இழந்து, மக்களாதரவையும் இழந்து நடுத்தெருவில் செருப்படி படும் காலம் வெகு விரைவில் வரத்தான் போகிறது.
ஏனெனில் அரசு நடந்துகொள்ளும் விதமானது தலிபான்களின் தாக்குதல்களைவிட கோர விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகவே இருப்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் யாருக்கும் என்ன செய்வது என்பதுதான் புரியவில்லை. தலிபான்களுக்கு எதிரான தாக்குதல் என்பதைப் புரிந்துகொள்ளலாம். அதில் பஷ்டூன்களைக் களப்பலியாக்குவதன் பின்னணியில் உள்ள நிதி சார் அரசியலை யாரும் ஏற்க இயலாது.
ஷெரீஃபுக்கு யாராவது உடனடியாக நல்லபுத்தி சொல்லியாகவேண்டும். இல்லாவிட்டால் கூடியவிரைவில் பாகிஸ் தானில் மிகத் தீவிரமான உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கும் சூழல் ஏற்படலாம்.