

ஸ்பைடர்மேன் அநீதிக்கு எதிராகப் போராடுவார், வில்லன்களை வெற்றிகொள்வார். ஆனால் மெக்ஸிகோ ஸ்பைடர்மேன் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். 2002-ம் ஆண்டு ஸ்பைடர்மேன் திரைப்படம் வெளியானது. 12 வயது மோய்சஸ் வாஸ்க்வஸ் ரேயஸ் திரைப்படத்தைப் பார்த்தவுடன் ஸ்பைடர்மேன் ரசிகனாகிவிட்டார்.
ஒருகட்டத்தில் ஸ்படைமேன் போலவே நடந்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார். ஸ்பைடமேன் குறித்த அனைத்துத் தகவல்களையும் இணையத்தின் மூலம் அறிந்துகொண்டார். ஒரு கதையில் ஸ்பைடர்மேன் ஆசிரியராக வேலை செய்வார். உடனே தானும் ஸ்பைடர்மேன் ஆடையுடன் பாடம் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். கடந்த 2 ஆண்டுகளாக மெக்ஸிகோ பல்கலைக்கழகத்தின் கம்ப்யூட்டர் சயின்ஸ் பேராசிரியராக மோய்சஸ் பணியாற்றி வருகிறார்.
‘’தினமும் ஸ்பைடர்மேன் போல உடை அணிந்து வருவது சாத்தியமில்லை. பரீட்சை, சில முக்கியமான தருணங்களின்போது ஸ்பைடர்மேன் உடையில் அசத்திவிடுவேன். ஒரு ஸ்பைடர்மேனாக நான் சொல்லும் அனைத்து விஷயங்களையும் மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்டுக்கொள்வார்கள். ஆரம்பத்தில் என் குடும்பத்தினரும் நண்பர்களும் இதை எதிர்த்தார்கள்.
மாணவர்களும் சக பேராசிரியர்களும் கூட வித்தியாசமாகப் பார்த்தார்கள். எல்லாம் கொஞ்சம் காலத்துக்குத்தான். இப்போது எல்லோரும் இயல்பாக ஏற்றுக்கொண்டார்கள். ஸ்பைடி மோய் என்று செல்லமாக அழைக்கிறார்கள். எல்லோரையும் போல அதே பாடத்தைத்தான் நானும் எடுக்கிறேன். ஆனால் ஸ்பைடர்மேன் ஆடையில் பாடம் எடுப்பதால் உலகிலேயே தனித்துவம் கொண்டவனாக இருக்கிறேன்.
இப்படி இருப்பவர் எப்படிப் பாடம் எடுப்பார் என்று சிலர் நினைப்பதுண்டு. என் வேலையை நான் அதிக சிரத்தையுடன் செய்து வருகிறேன் என்பதை என் மாணவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்’’ என்கிறார் மோய்சஸ்.
பாடம் எடுக்கும் ஸ்பைடர்மேன்!
ரஷ்யாவைச் சேர்ந்த 29 வயது நீனா ஸ்குர்ஸ்கயா, சைபீரியாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரை 2 ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். அவருக்கு ஏற்கெனவே 2 முறை திருமணம் ஆகிவிட்டது என்ற தகவலையும் சொல்லிவிட்டார். தான் எதிர்பார்த்த நேர்மையான, அருமையான மனிதர் இவர்தான் என்று நீனாவும் மகிழ்ச்சியில் இருந்தார். தன்னை அவர் எப்போது திருமணம் செய்துகொள்வார் என்று காத்திருந்தார். தானே ஒரு சுற்றுலா செல்லலாம் என்றும் கேட்டார். ஆனால் வழக்கறிஞரோ க்ரீமியாவுக்குச் செல்ல வேண்டும் என்றார்.
அதற்குச் சம்மதம் தெரிவித்த நீனா, தானே விமான டிக்கெட்டுகள் எடுத்தார், 12 நாட்களுக்குத் தங்கும் விடுதியை ஏற்பாடு செய்தார். ஆனால் க்ரீமியா சென்றும், வழக்கறிஞர் திருமணக் கோரிக்கையை வைக்கவில்லை. பொறுத்துப் பார்த்த நீனா, அவரிடம் சண்டை போட்டார். உடனே தங்கும் விடுதியை விட்டு நீனாவை வெளியேற்றினார் வழக்கறிஞர். தன் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து, வீடு வந்து சேர்ந்தார் நீனா. அந்த நாளில் இருந்து வரிசையாகப் பிரச்சினைகள் ஆரம்பித்தன. வழக்கறிஞர் 2 ஆண்டுகளில் தான் செலவு செய்த ஒவ்வொரு ரூபாயையும் திருப்பித் தரும்படிக் கேட்டார். பூங்கொத்து வாங்கிய பில், காபி குடித்த பில், உணவு சாப்பிட்ட பில், பெட்ரோல் பில் போன்றவற்றைச் சமர்ப்பித்து, 46 ஆயிரம் ரூபாயைத் திருப்பித் தரும்படிச் சொன்னார்.
அதிர்ச்சியடைந்தார் நீனா. கடந்த 2 இரண்டு ஆண்டுகளில் வழக்கறிஞர் அவரிடம் மிகவும் அன்பாக நடந்த ஒரு சம்பவமும் இல்லை. அதனால் அவரிடம் ஆதாரம் எதுவுமில்லை. இருவரும் சேர்ந்து புகைப்படங்கள் கூட எடுத்தது இல்லை. வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ’’நான் இதுவரை நீனாவுக்குப் பரிசுப் பொருள் தருகிறேன் என்றோ, இலவசமாக காரில் அழைத்துச் செல்கிறேன் என்றோ சொன்னதில்லை. நானாக இவரைக் காதலிக்கிறேன் என்று கூறியதும் இல்லை. அவர்தான் என்னுடைய நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டார்.
நேரத்துக்குக் கணக்குப் பண்ணினால் எவ்வளவோ தரவேண்டும். ஆனால் நான் செலவு செய்தவற்றுக்கு மட்டுமே பணத்தைத் தரச் சொல்கிறேன்’’ என்கிறார் வழக்கறிஞர். ’’இந்தச் சம்பவமும் எனக்கு ஒரு பாடம். ஆண்கள் மீது என் நம்பிக்கை குறைந்துவிட்டது’’ என்கிறார் நீனா.
காதலியிடம் ரீஃபண்ட் கேட்பவரை என்ன செய்யலாம்?