சல்மான் குர்ஷித் வருகை திருப்தியளிக்கிறது: ராஜபக்‌ஷே

சல்மான் குர்ஷித் வருகை திருப்தியளிக்கிறது: ராஜபக்‌ஷே
Updated on
1 min read

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் வருகை தந்திருப்பது திருப்தியளிப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே தெரிவித்துள்ளார்.

இலங்கையில், நாளை காமன்வெல்த் மாநாடு தொடங்குகிறது. இதனை ஒட்டி இன்று மாநாட்டை ஏற்று நடத்தும் இலங்கையின் அதிபர் ராஜபக்‌ஷே பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர்: காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் வருகை தந்திருப்பது திருப்தியளிக்கிறது. இலங்கையின் வடக்கு மாகாணங்களில், தமிழர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருகிறது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், 50,000 வீடுகளை கட்டும் பணி, சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை இலங்கை மேற்கொண்டுள்ளது. தமிழர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நலத்திட்டங்களுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே என்றார்.

'அவர் அப்படிச் சொல்லவில்லையே' :

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் பங்கேற்கக் கூடாது என தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரதமர் மன்மோகன் சிங் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து உங்கள் கருத்து என்ன என்று இந்திய பத்திரிகையாளர் ஒருவர் அதிபர் ராஜபக்‌ஷேவிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ராஜபக்‌ஷே: 'ஆனால் இது மாதிரி பிரதமர் என்னிடம் சொல்லவில்லையே' என்றார்.

மறைப்பதற்கு ஒன்றும் இல்லை:

சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், இலங்கை அரசு சர்வதேச சமூகத்திடம் இருந்து எதையும் மறைக்கவில்லை. இலங்கை போரின் போது மனித உரிமை மீறல்கள் நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் ராஜபக்‌ஷே தெரிவித்தார். மேலும், தமிழ் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராகவே இருக்கிறேன் என்றார்.

பிரதமர் கடிதம்:

காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்துகொள்ள முடியாதது குறித்து இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்ஷேவுக்கு பிரதமர் மன்மோகன் சிங், கடந்த வாரம் கடிதம் எழுதியிருந்தார்.

அந்த கடிதமானது இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் ராஜபக்ஷேவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்ற விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in