

நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி நேற்று இந்தியப் பெருங்கடலுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது. விமானம் காணாமல் போய் நேற்றுடன் ஒரு வாரம் முடிந்து விட்டது.
மலேசிய தலைநகர் கோலாலம் பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு கடந்த சனிக்கிழமை அதிகாலை புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமாக மறைந்தது. அதில் 152 சீனர்கள், 5 இந்தியர்கள் உள்பட 239 பேர் இருந்தனர்.
சீனா, அமெரிக்கா, மலேசியா ஆகிய நாடுகள் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் செயற் கைக்கோள்கள் மூலம் அந்த விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. நேற்று முன்தினம் இந்தியாவும் விமானத்தை தேடும் பணியில் இணைந்தது. வியட்நாமின் கிழக்கு, மேற்கு கடல் பகுதிகளிலும் மலாகா ஜலசந்தி, அந்தமான் கடல் பகுதியிலும் தேடுதல் பணி நடைபெற்றது. இந்நிலையில் நேற்று இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் தேடுதல் பணி நடத்தப்பட்டது. எனினும் விமானம் குறித்த சிறு தடயங்கள் கூட இது வரை கிடைக்கவில்லை.
கடலில் ஏற்பட்ட அதிர்வலை
மாயமான விமானம் ரேடாரின் பார்வையில் இருந்து விலகிய அரைமணி நேரத்தில் மலேசியா - வியட்நாம் இடையிலான கடல் பகுதியின் அடிப்பரப்பில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளதை சீனா கண்டுபிடித்துள்ளது. விமானம் கடலில் விழுந்ததால் அந்த அதிர்வலைகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று சீன அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானம் கடைசியாக கண் காணிப்பில் இருந்ததாகக் கூறப் படும் இடத்தில் இருந்து சுமார் 116 கி.மீ. தொலைவில் உள்ள கடல் பகுதியில் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன. எனவே அங்கு விமானம் விழுந்திருக்க வாய்ப்பு அதிகமுள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளுக்கு தொடர்பு?
விமானம் மாயமானது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சிறப்பு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் அந்த விமானம் கடைசியாக அந்தமான் தீவுகளை நோக்கி திட்டமிட்டு செலுத்தப்பட்டதாக ரேடாரில் பதிவாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதே போல சீனாவில் செயல்படும் உய்குர் பயங்கரவாதிகளுக்கு விமானம் மாயமான சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேக மும் ஏற்பட்டுள்ளது.