Published : 18 Oct 2014 11:26 AM
Last Updated : 18 Oct 2014 11:26 AM

உலக மசாலா: நியூயார்க்கில் பிரபலமான மாடல் நாய்

நியூயார்க்கில் போதி என்ற ஷிபா இனு வகை நாய் பிரபலமான மாடலாக இருக்கிறது. புகழ்பெற்ற பிராண்ட்களின் ஆண்களுக்கான ஆடைகளை அணிந்து மாடலாக வலம் வருகிறது இந்த நான்கு வயது போதி! யென்னா கிம், டேவ் ஃபங் இருவரும் பொழுது போகாமல் உட்கார்ந்திருந்த ஒரு நாளில், போதிக்கு ஆடை அணிந்து பார்த்தால் என்ன என்ற யோசனை தோன்றியது. நிறையப் பேர் தங்கள் செல்லப் பிராணிகளுக்கு ஆடைகளை அணிந்து அழகு பார்த்திருக்கிறார்கள். ஆனால் தாங்கள் சற்று வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர்.

ஃபேஷன் டிசைனரை அழைத்து, அட்டகாசமான ஆடைகளை வடிவமைக்கச் சொன்னார்கள். கிராஃபிக்ஸில் நாய்க்கு ஆடை அணிந்து பார்த்து, பிறகு போதிக்கு அதை மாட்டி விட்டனர். விரைவிலேயே தன்னுடைய பணி என்ன என்பதைப் புரிந்துகொண்ட போதி, விதவிதமான ஆடைகளை அணிந்து அட்டகாசமாக கேமராவுக்கு போஸ் கொடுக்க ஆரம்பித்தது! இன்று சூப்பர் மாடலாக வலம் வருகிறது! தொப்பி போட்டு, டை கட்டி, விதவிதமான ஆடைகளை அணிந்து வரும் போதியை, இணையத்தில் 1,40,000 பேர் பின்தொடர்கிறார்கள்.

பார்க்க அழகாகத்தான் இருக்கு இந்தப் போதி! ஆனால் நாய் மாடலாக வருவது எல்லாம் டூ மச்!

மிலிட்டரி ஆபிசராக இருக்கும் கோலன் கெல்டன், ஜப்பானில் வசித்து வருகிறார். மங்கலான சில்வர் நிறம் கொண்ட காரை அவருக்குப் பிடிக்கவே இல்லை. தன் மனைவி அல்லிசனிடம், காரைப் பிடித்த மாதிரி ஏதாவது செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 100 மணி நேரம் பொறுமையாக அமர்ந்து, கார் மீது அழகான ஓவியங்களைத் தீட்டி முடித்துவிட்டார் அல்லிசன்! காரின் மேல் புறத்தில் ஓர் இடம் கூட விட்டுவைக்கவில்லை. காரைப் பார்த்த கெல்டன் ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டார். காரை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றால், எல்லோரும் காரைப் பற்றியே புகழ்ந்து பேசுகிறார்கள். கெல்டனுக்குப் பெருமை தாங்கவில்லை!

அடடா! எப்படி இருந்த கார், இப்படி ஆயிருக்கு!

சீனாவில் காற்றுக் குடை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. வாங் சுவான் உருவாக்கியிருக்கும் இந்தக் காற்று குடையைப் பிடித்துக்கொண்டு மழையில் சென்றால், ஒரு துளி மழை கூட உங்கள் மீது விழாது. பேட்டரியால் இயங்கும் காற்றாடி மழைத் தண்ணீரை மேலே விழாமல் பார்த்துக்கொள்கிறது. ஒரு பெரிய டார்ச் அளவே இருக்கும் இந்தக் காற்றுக் குடையை எடுத்துச் செல்வதும் பராமரிப்பதும் மிக எளிது. ஒருமுறை பேட்டரியை சார்ஜ் செய்தால், 30 நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம்!

ஆஹா! கண்டுபிடிப்புகளில் அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை சீனர்களை அடிச்சுக்க ஆள் இல்லை!

இங்கிலாந்தில் உள்ள கார்ன்வால் பகுதியில் சமைத்துக் கொண்டிருந்த ஒரு பெண், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். தோட்டத்தில் ஒரு குட்டி முதலை வாயைத் திறந்தபடி பார்த்துக்கொண்டிருந்தது. அக்கம்பக்கத்தினரிடம் உதவி கேட்டார். மழை பெய்துகொண்டிருந்ததால் முதலையை நெருங்குவதும் சிரமமாக இருந்தது. போலீசுக்குத் தகவல் கொடுத்தார். வீட்டுக்குள் முதலை என்றதும் ஒரு பெரிய போலிஸ் பட்டாளமே வந்து இறங்கிவிட்டது. பலத்த முன்னேற்பாடுகளுடன் முதலை அருகில் சென்றனர். முதலையிடம் எந்தவிதமான அசைவும் இல்லை. பிறகுதான் தெரிந்தது, அது ஒரு பொம்மை முதலை என்று!

யார் பண்ணின காரியமோ… இப்படியெல்லாமா விளையாடுவாங்க?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x