ராஜ்நாத்தை அவமதித்த பாகிஸ்தான் அரசு: சார்க் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பாதியிலேயே வெளியேறினார்

ராஜ்நாத்தை அவமதித்த பாகிஸ்தான் அரசு: சார்க் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பாதியிலேயே வெளியேறினார்
Updated on
2 min read

சார்க் மாநாட்டில் இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவமதிக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு செயல்பட்டது. இதனால் அவர் பாதியிலேயே வெளியேறினார்.

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் வானி கடந்த 8-ம் தேதி போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை சாதகமாகப் பயன்படுத்தி பாகிஸ் தான் அரசு காஷ்மீரில் கலவரத்தைத் தூண்டியது.

தீவிரவாதி புர்ஹான் வானியை தியாகி என்று அறிவித்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவருக் காக கருப்புத் தினத்தையும் அனுசரித்தார். காஷ்மீர் விரைவில் பாகிஸ்தானுக்கு சொந்தமாகும் என்றும் கூறினார்.

இந்தப் பின்னணியில் சார்க் உள்துறை அமைச்சர்களின் ஒரு நாள் மாநாடு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் நேற்று நடைபெற் றது. இதில் இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசினார். அப்போது பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் குற்றம் சாட்டினார். அவர் பேசியதாவது:

தீவிரவாதிகளில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்ற பாகுபாடு கிடை யாது. அனைவருமே தீயவர்கள் தான். தீவிரவாதிகளைப் போற்றிப் புகழ்வதோ, அவர்களை தியாகிக ளாக சித்தரிப்பதோ கூடாது. தீவிர வாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளை (பாகிஸ்தான்) தனிமைப் படுத்தி தண்டிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியபோது அவரது பேச்சை நேரடியாக ஒளிபரப்பு செய்ய இந்திய ஊடகங்களை பாகிஸ்தான் அரசு அனுமதிக்கவில்லை. அந்த நாட்டு அரசு ஊடகமான பிடிவி மட்டுமே நிகழ்ச்சிகளை ஒளிபரப் பியது. பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நிசார் அலிகான் பேச்சுகளை மட்டுமே பிடிவி நேரடியாக ஒளிபரப்பியது. ராஜ்நாத் சிங் பேசியபோது நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை. அவரது பேச்சைத் தணிக்கை செய்து வெளியிட்டது.

விருந்து புறக்கணிப்பு

மாநாட்டில் மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நிசார் அலிகான் வேண்டு மென்றே புறக்கணித்தார். இதனால் அதிருப்தி அடைந்த அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் விருந்தில் பங் கேற்கவில்லை. அவர் மாநாட்டில் இருந்து பாதியிலேயே வெளியேறி டெல்லிக்குத் திரும்பினார்.

கைகுலுக்காத நிசார்

இஸ்லாமாபாதின் செரீனா ஓட்டலில் சார்க் மாநாடு நடை பெற்றது. மாநாட்டுக்கு வந்தவர் களை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நிசார் அலி கான் வாயிலில் நின்று வரவேற்றார்.

ராஜ்நாத் சிங் வந்தபோது நிசார் அலி கான் ஆரத் தழுவவோ, நட்புடன் கைகுலுக்கவோ இல்லை. இருவரும் நேருக்கு நேர் சந்தித்தும் விலகிச் சென்றனர். ராஜ்நாத் சிங் ஓட்டலுக்கு சென்றபோது இந்திய பத்திரிகை புகைப்பட கலைஞர்கள், வீடியோகிராபர்கள் படம் எடுக்க முயன்றனர். ஆனால் பாகிஸ்தான் பாதுகாப்புப் படை அதிகாரிகள் அவர்களை வலுக்கட்டாயமாக தடுத்துவிட்டனர்.

தீவிரவாதிகள் போராட்டம்

ராஜ்நாத் சிங்கின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானின் அடிப்படைவாத அமைப்புகள் நேற்று பல்வேறு போராட்டங்களை நடத்தின. இந்தப் போராட்டங்களில் தீவிரவாதிகளும் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in