

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு வெளிநாடுகளிடம் தீர்வை எதிர்பார்க்க வேண்டாம். நாமே பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று இலங்கை தமிழ்த் தலைவர்களுக்கு அந்நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் 2014-ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய ராஜபக்சே, ‘சம்பந்தம் (தமிழ் தேசிய கூட்டணி தலைவர்) மற்றும் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ஆகியோருக்கு நான் நேரடியாக அழைப்பு விடுக்கிறேன். நாட்டில் அமைதி, எல்லா பிரிவினருக்கும் இடையில் நல்லிணக்கம் ஏற்பட நாம் பேச்சு நடத்த வேண்டும்.
உள் நாட்டுப் பிரச்சினைக்கு வெளிநாடுகளிடம் தீர்வை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நாமே தீர்வுகாண முடியும். மற்றவர்களுக்கு நாம் சிறந்த முன்னுதாரணமாக இருந்து வழிகாட்டுவோம். நாட்டில் அமைதி ஏற்படுத்துவதே அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் முக்கியக் கடமை.
அமைதி நிலவ அ்னைத்து பிரிவினரும் ஒன்றிணைய வேண்டும். நமக்குள் பகைமை யுணர்வும், வன்மமும், அவதூறான பேச்சுகளும் இருக்கக் கூடாது. நமது தேச ஒற்றுமையை உறுதிப்படுத்த வேண்டிய நேரமிது என்றார்.
ஜனநாயகத்தில் முக்கிய திருப்பம்
25 ஆண்டுகளில் முதல்முறையாக கடந்த செப்டம்பரில் வடக்கு மாகாண கவுன்சில் தேர்தல் நடத்தப்பட்டதை சுட்டிக் காட்டி பேசிய ராஜபக்சே, வடக்கில் மாகாண கவுன்சில் தேர்தலை நாம் நடத்தியுள்ளோம். இது நமது ஜனநாயகத்தில் நாம் எட்டியுள்ள முக்கியமான திருப்பம். தமிழர் பகுதிகளில் பொது சேவை வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதில் எனது அரசு உறுதியுடன் உள்ளது. இதுவே வடக்கே உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என்றார்.
இலங்கையில் உள்நாட்டுப் போரில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான விவாதம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் மார்ச் மாதம் விவாதத்துக்கு வர உள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழ் தலைவர்களுக்கு ராஜபக்சே அழைப்பு விடுத்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.