உக்ரைனில் அதிபருக்கு எதிரான போராட்டம் தீவிரம்

உக்ரைனில் அதிபருக்கு எதிரான போராட்டம் தீவிரம்
Updated on
1 min read

உக்ரைனில் அதிபருக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. அங்கு எந்நேரமும் அரசுப் படைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பெரும் மோதல் ஏற்படும் சூழல் நிலவுகிறது.

ஐரோப்பிய கூட்டமைப்புடன் அரசியல் மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் அதிபர் யானுகோவிச் கையெழுத்திட மறுத்ததை தொடர்ந்து, அதிபர் பதவி விலக வலியுறுத்தியும் முன்கூட்டியே தேர்தல் நடத்தக் கோரியும் உக்ரைனில் எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி தலைநகர் கீவ் நகரில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டுள்ளனர்.

போராட்டத்துக்குத் தடை

போராட்டத்துக்கு அரசு தடை விதித்துள்ள நிலையில் தடையை மீறி கூடிய இவர்கள், அதிபருக்கு எதிராகவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஐரோப்பிய கூட்டமைப்பு ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டதற்கு காரணமான அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் என்றும் முழக்கமிட்டு வருகின்றனர். இவர்கள் அருகில் உள்ள அதிபரின் நிர்வாக அலுவலகத்தை நோக்கி முன்னேறிச் செல்ல முடியாத வகையில் போலீஸார் தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். போராட்டக்காரர்கள் நேற்று தடுப்புகளை உடைத்துக்கொண்டு முன்னேறிச் செல்ல முயன்றனர். அப்போது ஏற்பட்ட மோதலில் 100 போலீசார் உள்பட 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் அதிபர் நிர்வாக அலுவலகத்துக்கு வெளியே போராட்டக்காரர்களை நோக்கி பாதுகாப்பு படையினர் எறிகுண்டுகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வருவதாகவும், பதிலுக்கு போராட்டக்காரர்கள் கற்களை வீசி வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய யூனியன் தலைவர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற உச்சி மாநாட்டில், ஐரோப்பிய யூனியனுடன் உக்ரைன் இணைவதற்கு வழிவகுக்கும் ஒப்பந்தத்தில் அதிபர் யானுகோவிச் கையெழுத்திட மறுத்து விட்டார். ரஷியாவுடன் உறவை முறித்துக்கொள்ள ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. அதனால் இந்த ஒப்பந்தத்தில் அதிபர் கையெழுத்திடவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in