

தாய்லாந்து மன்னரின் பிறந்த நாளை முன்னிட்டு, அங்கு அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் தொடர் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதால் பதற்றம் சற்று தணிந்துள்ளது.
ஊழல், முறைகேடுகள் காரணமாக, பிரதமர் யிங்லக் ஷினவத்ரா தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும், உடனடியாக பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த இரு வாரங்களாக எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை நோக்கி புதன்கிழமை பேரணியாக சென்றனர். வழக்கமாக ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்துவதுடன், கண்ணீர் புகை குண்டுகளையும் தண்ணீரையும் பீய்ச்சி அடிக்கும் போலீஸார், அங்கிருந்த தடுப்புகளை நீக்கியதுடன் போராட்டத்துக்கு அனுமதி வழங்கினர். அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கைகுலுக்கினர்.
தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜின் 86-வது பிறந்த நாள் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில்தான் போராட்டக்காரர்களை போலீஸார் தடுக்க முற்படவில்லை என கூறப்படுகிறது.
மன்னருக்கு மரியாதை செலுத்தும் வகையில் போராட்டக்காரர்களும் ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர். மன்னரின் பிறந்த நாளை முன்னிட்டு வியாழக்கிழமை போராட்டம் கைவிடப்படுவதாக தெரிவித்துள்ள தவுக்சுபன், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களை பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கு வழிவகுக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 7-வது பிரிவை நீக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.