Published : 18 Jul 2016 09:03 AM
Last Updated : 18 Jul 2016 09:03 AM

ராணுவ புரட்சிக்கு ஆதரவு தெரிவித்ததால் துருக்கியில் 2,750 நீதிபதிகள் கைது

துருக்கியில் ராணுவ புரட்சிக்கு ஆதரவு அளித்த 2,750 நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கடந்த 15-ம் தேதி இரவு ராணுவத்தின் ஒரு பிரிவினர் அதிபர் எர்டோகனின் ஆட்சியை கவிழ்க்க ராணுவ புரட்சியில் ஈடுபட்டனர். அதனை ஆளும் ஏ.கே. கட்சி, எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து வெற்றிகரமாக முறியடித்தனர்.

புரட்சியில் ஈடுபட்டதாக 3,000 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர். நீதித் துறையிலும் பலர் புரட்சிக்கு ஆதரவு அளித்தனர். அந்த வகையில் 2750 நீதிபதிகள் நேற்றுமுன்தினம் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக துருக்கி நீதித் துறை அமைச்சர் பெகிர் போஸ்டாக், அரசு ஊடகமான டிஆர்டி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ராணுவம், நீதித் துறை களங்கப்பட்டிருக்கிறது. அவற்றை சுத்தப்படுத்தி வருகிறோம். இரு துறைகளிலும் இதுவரை 6 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

துருக்கியில் தற்போது மரண தண்டனைக்கு தடை விதிக்கப்பட் டுள்ளது. எனினும் ராணுவ புரட்சி யில் ஈடுபட்டவர்களை கடுமையாக தண்டிக்க மரண தண்டனைக்கான தடையை நீக்க, துருக்கி அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம் மதத் தலைவர் பெதுல்லா குலனே ராணுவ புரட்சிக்கு காரணம் என்று அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார். அவரை துருக்கிக்கு திருப்பி அனுப்பும்படி அமெரிக்காவிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் பெதுல்லாவுக்கு எதிராக உறுதியான ஆதாரங்களை அளித்தால் மட்டுமே எர்டோகனின் கோரிக்கையை பரிசீலிக்க முடியும் என்று அமெரிக்க அரசு வட்டாரங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.

அதிபர் எர்டோகன் பின்னணி

துருக்கியில் கடந்த 2001 ஆகஸ்டில் ஏ.கே.கட்சி தொடங் கப்பட்டது. தற்போதைய அதிபர் எர்டோகனும் அப்துல்லா குல் என்பவரும் இணைந்து கட்சியை தொடங்கினர். 2002 நவம்பரில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஏ.கே. கட்சி அமோக வெற்றி பெற்று அப்துல்லா குல் பிரதமராக பதவியேற்றார்.

தேர்தல் ஆணைய தடை காரணமாக எர்டோகன் தேர்தலில் போட்டியிடவில்லை. எனினும் சில மாதங்களில் அவர் மீதான தடையை ஆளும் கட்சி நீக்கியது. இதைத் தொடர்ந்து இடைத்தேர்தலில் போட்டியிட்ட எர்டோகன் 2003 மார்ச்சில் பிரதமரானார்.

அடுத்தடுத்து 2007, 2011 நாடாளுமன்ற தேர்தல்களிலும் ஏ.கே.கட்சி வெற்றி பெற்று எர்டோகன் பிரதமராக நீடித்தார். அந்த நாட்டு சட்டத்தின் 4-வது முறை பிரதமராக முடியாது என்பதால் அரசமைப்பு சாசனத்தை திருத்தி அதிபர் தேர்தல் நடத்த வகை செய்தார். அதன்படி முதல்முறையாக 2014-ல் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் 52 சதவீத வாக்குகளைப் பெற்ற எர்டோகன் அதிபராகப் பொறுப்பேற்றார்.

புரட்சியை முறியடித்த ஊடகம்

கடந்த 13 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் நீடிக்கும் எர்டோகன் பழமைவாத கொள்கை களை ஆதரித்து வருகிறார். சமூக ஊடகங்கள், மேற்கத்திய கலாச் சாரத்தை கடுமையாக எதிர்த்து வருகிறார். பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டு வருவதாக பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. எர்டோ கனின் சர்வாதிகார போக்கினால் கடந்த மே மாதம் பிரதமர் அகமது டாவுட்டோலு பதவியை ராஜினாமா செய்தார்.

இந்தப் பின்னணியில் ராணுவ புரட்சி வெடித்துள்ளது. இதில் எர்டோகன் கடுமையாக வெறுக்கும் சமூக ஊடகங்கள்தான் அவரது ஆட்சியைக் காப்பாற்றியுள்ளது.

கடந்த 15-ம் தேதி இரவு 10 மணிக்கு சமூக ஊடகங்களில் ராணுவ புரட்சி குறித்த தகவல்கள் தீயாகப் பரவின. தலைநகர் அங்காரா, இஸ்தான்புல் நகரின் முக்கிய பகுதிகளில் ராணுவம் முகாமிட்டிருப்பதாக சமூகவலை தள ஆர்வலர்கள் தகவல்களை பரப்பினர்.

உடனடியாக சுதாரித்து கொண்ட அதிபர் எர்டோகன், தான் தங்கியிருந்த மர்மாரிஸ் நகர ஹோட்டலில் இருந்து பாதுகாப் பான இடத்துக்கு தப்பினார். மறைவிடத்தில் இருந்து கொண்டு ஐ போனின் பேஸ்டைம் மூலம் சிஎன்என் தொலைக்காட்சிக்கு நள்ளிரவில் பேட்டியளித்தார். அவரது பரபரப்பான பேட்டி பேஸ்புக், ட்விட்டர் என அனைத்து சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவின.

இதன்காரணமாகவே அங்காரா, இஸ்தான்புல்லில் லட்சக் கணக்கான பொதுமக்கள் நள்ளிர வில் சாலைகளில் திரண்டு 5 மணி நேரத்தில் ராணுவ புரட்சியை முறியடித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x