

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தீவிரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரி ஒருவர் பலியானார்.
பாரீஸின் வர்த்தகப் பகுதியான சேம்ப்ஸ் எலைசீஸ் வியாழக்கிழமை இரவு தீவிரவாதி ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினார். இத்தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் பலியானார். மேலும் இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி, போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாரீஸில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. பிரான்ஸில் வரும் 23- ம் தேதி தேர்தல் நடைபெறும் வேளையில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப் கண்டனம்
பிரான்ஸில் நடத்தபட்ட ஐஎஸ் அமைப்பு நடத்திய தீவிரவாதத் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்ரம்ப் கூறும்போது, பிரான்ஸில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஐஎஸ் அமைப்பு தொடர்ந்து பிரான்ஸில் இது போன்ற தீவிரவாதம் நடத்தி வருவது கண்டனத்துக்குரியது. தீவிரவாதத்துக்கு எதிராக நாம் வலிமையாகவும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும்" என்றார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரான்ஸின் நீஸ் நகரில் தேசிய தின கொண்டாட்டத்தின்போது கனரக லாரியை அதிவேகமாக ஓட்டி வந்த ஐ.எஸ் தீவிரவாதி ஒருவர் தாக்குதல் நடத்தியதில் 10 குழந்தைகள் உட்பட 84 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.