

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 104 வீரர்கள் விஷ ஊசியால் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இலங்கையில் கடந்த 2009-ல் நடந்த இறுதிக்கட்டப் போரில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் அரசுப் படையிடம் சரண் அடைந்தனர். அவர்கள் இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது 11 ஆயிரம் வீரர்களுக்கு விஷஊசி செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்களில் 104 பேர் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களால் உயிரிழந்துள்ளனர். இதற்கு விஷ ஊசியே காரணம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் விஷஊசி செலுத்தப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகளின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்றும் அவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக இலங்கை வடக்கு மாகாண சட்டப்பேரவையில் அண்மையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில், இலங்கையில் கூட்டுப் பயிற்சிக்காக முகாமிட்டிருக்கும் அமெரிக்க விமானப் படை மருத்துவர்கள் மூலம் பாதிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் வீரர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த கோரிக்கையை இலங்கை அரசு ஏற்க மறுத்துவிட்டது. அமெரிக்க மருத்துவர்களைவிட சிறந்த மருத்துவர்கள் இலங்கையில் உள்ளனர் என்று அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
200 பேரை காணவில்லை
இதனிடையே விடுதலைப் புலிகள் அமைப்பின் 200 மூத்த தலைவர்கள் காணாமல் போயுள்ளனர் என்று ஐ.நா. சபையில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐ.நா. சபை முன்னாள் அதிகாரி யாஸ்மின் சூகா தலைமையிலான குழு இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றச்சாட்டையும் இலங்கை அரசு மறுத்துள்ளது.