

அமெரிக்காவுடன் நெருக்கமாக இருந்த பனாமா நாட்டின் ராணுவத் தளபதி மானுவல் நொரீகா பின்னர் அமெரிக்காவால் கைது செய்யப்பட்டு சிறைபடுத்தப்பட்டதையும் பனாமாவின் முதல் பெண் அதிபரான மிரேயா எலிசா மோஸ்கோசா குறித்தும் பார்த்தோம். அவரது செயல்பாடுகள் இக்கட்டுரையில் தொடர்கின்றன.
மோஸ்கோசா அதிபர் ஆனவுடன் வேறு ஒரு விந்தையும் நிகழ்ந்தது. ஒரு நாட்டின் அதிபரின் மனைவியை ஃபர்ஸ்ட் லேடி என்று அழைப்பதுண்டு. ஆனால் முதல் முறையாக ஒரு பெண்மணி (மேஸ்கோசா) அதிபராகிவிட்டதால் யாரை அப்படி அழைப்பது. மோஸ்கோசாவின் அக்கா ரூபி என்பவர் இந்த அலங்காரப் பதவியை அலங்கரித்தார்!
டோரிஜாஸ் ஆட்சிக் காலத்தில் செய்து கொண்ட ஒப்பந்தப்பட்டி அமெரிக்காவின் பிடியிலிருந்து பனாமாவின் வசம் பனாமா கால்வாய் வந்து சேர்ந்தபோது மோஸ்கோசாதான் பனாமாவின் அதிபராக இருந்தார். அதே சமயம் அவர் ஆட்சியில் ஊழல்கள் தலைவிரித்து ஆடின. அவரது புகழ் பாதிக்கப்பட்டது.
மோஸ்கோசா பிரபல பிசினஸ் புள்ளியான ரிச்சர்ட் க்ரூபர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஒரு மகனையும் தத்து எடுத்தார்கள். ஆனால் சீக்கிரமே தம்பதிகளுக்கிடையே விவாகரத்தும் நடைபெற்றது.
மோஸ்கோசா பனாமா நாட்டின் அதிபரானபோது சட்டசபைக்கு மிக அதிக அதிகாரங்கள் இருந்தன. தனக்குத் தோன்றியபடியெல்லாம் மோஸ்கோசாவால் நிதியை செலவழிக்க முடியவில்லை.
அமெரிக்க ராணுவம் பனாமாவின் கடற்கரைப் பகுதிகளை பல விதங்களில் சீரழித்திருந்தது. தனது அணுகுண்டுகள், ரசாயன ஆயுதங்கள் போன்றவற்றை சோதித்துப் பார்க்கும் களமாக அந்தக் கடற்கரைகளைப் பயன்படுத்திக் கொண்டது. இதனால் மாசு படிந்து பலவித சுற்றுச் சூழல் பிரச்சினைகளை பனாமா எதிர்கொள்ள வேண்டியிருந்தது. யுரேனியம், ஈயம் என்று பல விபரீத உலோக மிச்சங்களை நீக்குவதற்குப் பெரும் செலவானது.
சர்வதேசக் குற்றங்களை நிகழ்த்த (முக்கியமாக வரி ஏய்ப்பு) பனாமாவைக் களனாகக் கொண்டிருந்தார்கள் பல வணிகர்கள். இதைக் குறைக்க முயற்சி எடுத்துக் கொண்டார் மோஸ்கோசா.
தவிர பல அரசியல் சூழல்களில் மோஸ்கோசா சிக்கிக் கொள்ள நேர்ந்தது. பெரு நாட்டில் உளவாளியாகச் செயல்பட்ட விளாடி மிரோ என்பவருக்குப் பனாமாவில் தஞ்சம் அளிக்க வேண்டியிருந்தது. அமெரிக்க அரசின் அழுத்தம்தான் காரணம்.
அதே சமயம் அவர் அரசியலில் ஊழல் அதிகமானது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 1,46,000 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள வெகுமதிகளை அவர் வழங்கியது கடும் கண்டனத்துக்கு உள்ளானது. மக்கள் மீதான வரி விகிதம் அதிகமாகிக் கொண்டிருக்கும்போது எதற்காக இந்த வெகுமதிகள் என்று கேள்வி கேட்கப்பட்டன.
அடுத்த அதிபர் தேர்தலில் மோஸ்கோசா போட்டியிட முடியாத நிலை. காரணம் பனாமா அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒருவர் அடுத்தடுத்து இருமுறை அதிபராக இருக்க முடியாது.
இந்த நிலையில் தன் ஆட்சியின் கடைசி கட்டத்தில், கடுமையாக விமர்சிக்கப்பட்ட ஒரு செயலைச் செய்துவிட்டு நகர்ந்தார் மோஸ்கோசா. அது என்ன என்பதைப் பார்ப்போம்.
கியூபாவின் அதிபர் பிடல் காஸ்ட்ரோ 2000ல் பனாமாவுக்கு விஜயம் செய்தார். அப்போது அவர் மீது கொலை முயற்சியில் ஈடுபட்டதற்காக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அந்த நான்கு பேருக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார் மோஸ்கோசா.
கியூபா சீற்றம் கொண்டது. பனாமாவு டனான தனது தூதரக உறவுகளைத் துண்டித்துக் கொண்டது. வெனிசுலா அதிபர் தங்கள் பனாமா நாட்டுத் தூதரை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
மோஸ்கோசா அவசரமாக ஒரு விளக்கம் அளித்தார். “அடுத்து அதிபராக வருபவர் இந்த நால்வரையும் கியூபாவுக்கே அனுப்பி அங்கேயே அவர்களைப் படுகொலை செய்ய வாய்ப்பு உண்டு. அதனால்தான் மன்னிப்பு வழங்கினேன்’’ என்று அவர் கூறியது பிரச்சினைகளை அதிகமாக்கியது. மியாமியிலுள்ள கியூபா நாட்டவர் காஸ்ட்ரோவுக்கு எதிரானவர்கள் அவர்கள் நடுவே காஸ்ட்ரோவுக்குக் குறிவைத்த நால்வரும் ஹீரோக்களாகக் கருதப்பட்டார்கள். அவர்களின் மகிழ்ச்சியை மனதில் கொண்டே இந்தப் பொது மன்னிப்பு என்றார்.
பெண் அதிபரான மோஸ்கோசாவுக்குப் பிறகு 2014ல் மார்டின் டோரி ஜோஸ் அதிபர் ஆனார். இவர் அந்த நாட்டின் முன்னாள் அதிபர் ஒமர் டோரிஜோஸின் மகன். அந்த ஆண்டு பனாமா கால்வாய் மூலம் வருமானம் எக்கச்சக்கமாக இருந்தது. ஒரு பில்லியன் டாலர் என்ற அளவை எட்டியது.
2007-ல் பனாமா கால்வாயை அகலப்படுத்தும் பணிகள் தொடங்கின. அதற்கு அடுத்த வருடமே பனாமா கால்வாய் ஊழியர்கள் (தொழிற்சங்கத் தலைவர்கள் சிலர்) தொழிலாளர்கள் மேம்பாடு குறித்து அரசை எதிர்த்தனர். காவல்துறை கட்டுமானப் பணியாளர்கள் மீது தடியடி நடத்தியது. நிலைமை மீறவே துப்பாக்கிச் சூடும் நடத்தியது. இதில் தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் இறந்துவிட, நிலைமை மோசமானது. பிறகு ஒருவழியாக அமைதி திரும்பியது.
2008 டிசம்பரில் பனாமா கால்வாய் வழியாக ஒரு ரஷ்ய போர் கப்பல் பயணம் செய்தது. இதுவே ஒரு சரித்திர நிகழ்வு தான். காரணம் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றதிலிருந்தே சோவியத் யூனியனின் கப்பல்களுக்கு பனாமா கால்வா யில் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. (அமெரிக்க - ரஷ்ய பனிப்போர் உச்சகட்டத்தில் இருந்த நேரம் அது). 2010 அக்டோபரில் சீன சரக்குக் கப்பல் ஒன்று பனாமா கால்வாயைக் கடந்தபோது அதுவும் வரலாற்றுப் பதிவானது. அந்தக் கால்வாயைக் கடந்த மில்லியனாவது கப்பல் அது.
(உலகம் உருளும்)