இந்தியாவில் சகிப்பின்மை, வன்முறை அதிகரிப்பு: அமெரிக்கா கவலை

இந்தியாவில் சகிப்பின்மை, வன்முறை அதிகரிப்பு: அமெரிக்கா கவலை
Updated on
1 min read

இந்தியாவில் அதிகரித்து வரும் சகிப்பின்மை மற்றும் வன்முறைகள் குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டதோடு, அரசு இதனைக் கட்டுப்படுத்தி வன்முறைகளுக்கு காரணமானோரை நீதிக்கு முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

மாட்டிறைச்சி குறித்த வன்முறைகள், மத்திய பிரதேசத்தில் எருமை இறைச்சி கொண்டு சென்ற இரண்டு பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவற்றை குறிப்பிட்டு அமெரிக்க அரசு செய்தித் தொடர்பாளர் ஜான் கிரிபி கூறும்போது, “நாங்கள் இந்திய மக்கள், இந்திய அரசு ஆகியவற்றின் பக்கம் இருக்கிறோம். மதச்சுதந்திரம் நடைமுறைப்படுத்துவதில் ஆதரவு அளிக்கிறோம், அனைத்து வகையான பேச்சு சுதந்திரத்தை ஆதரிக்கிறோம் அனைத்து விதமான சகிப்பின்மையை எதிர்க்கிறோம்.

இந்தியாவில் சமீப காலங்களில் நிகழ்ந்து வரும் சகிப்பின்மை வன்முறைகள் குறித்து நாங்கள் உண்மையில் கவலையடைந்துள்ளோம். மற்ற நாடுகளில் இத்தகைய நிலவரங்கள் குறித்து எங்கல் நிலைப்பாடு என்னவோ அதேதான் இந்தியாவைப் பொறுத்தவரையிலும் எங்கள் நிலைப்பாடு. எனவே, மக்களைக் காக்க அரசு தன்னிடம் உள்ள அதிகாரத்தை பயன்படுத்த அனைத்தையும் செய்யுமாறு வலியுறுத்துகிறோம். வன்முறையைத் தூண்டுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்திய மக்கள் தங்களது சகிப்புத்தன்மை மற்றும் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் ஏற்புடைமை கொள்கையை உணர வேண்டும், இது இந்திய, அமெரிக்க உறவுகளின் ஆழமான நலன் சார்ந்தது” என்றார்.

பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் செயல்படும் கும்பல் ஒன்று உனாவில் இறந்த பசுமாட்டின் தோலை உரித்ததற்காக தலித் சமூகத்தினரை அடித்து உதைத்ததும், மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சாவ்ரில் உள்ள ரயில் நிலையத்தில் எருமை இறைச்சி வைத்திருந்த இரண்டு முஸ்லிம் பெண்களை பசு இறைச்சி வைத்திருந்ததான சந்தேகத்தின் பேரில் போலீஸ் முன்னிலையிலேயே ஒரு கும்பல் அடித்து உதைத்ததும் தலித் அமைப்பினரின் போராட்டங்களுக்குக் காரணமானது.

மேலும், மக்களவையில் தலித், முஸ்லிம்கள் பாதுகாப்பை எதிர்க்கட்சிகள் உரத்த குரலில் வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தியாவில் நிகழ்ந்து வரும் இத்தகைய சகிப்பின்மை விளைவு வன்முறைகள் குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in