

தாங்கள் கடத்திவைத்திருந்த 23 ராணுவ வீரர்களை கொன்று விட்டதாக தலிபான் தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தனர். இதையடுத்து தலிபான்களுடன் திங்கள்கிழமை நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் அரசு ரத்து செய்தது.
தலிபான்களுடன் பேச்சு நடத்த அரசு தரப்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் ஒருங்கிணைப்பாளர் இர்பான் சித்திக் கூறுகையில்,
“23 ராணுவ வீரர்களை கொன்ற அமைப்புடன் பேச்சு நடத்துவது வீண் வேலை என்பதே எனது கருத்து.இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற செயல்கள் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தும். இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க செவ்வாய்க்கிழமை அரசு தரப்பு பேச்சுவார்த்தைக் குழுவினரின் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளேன். எதிர்கால நடவடிக்கை குறித்து இக்கூட்டத்தில் முடிவு செய்யப் படும்” என்றார்.
கொல்லப்பட்ட வீரர்கள் அனைவரும் பாகிஸ்தான் பிராண்டியர் கார்ப்ஸ் படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்களை மொஹ்மந்த் ஏஜென்சி பகுதிக்கு உள்பட்ட ஷோங்காரி சோதனை சாவடி அருகே 2010-ம் ஆண்டு தலிபான்கள் கடத்திச் சென்று சிறை வைத்திருந்தனர்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை இரவு ஊடகங்களுக்கு தலிபான் தீவிரவாதிகள் ஓர் வீடியோ சி.டி.யை அனுப்பி வைத்தனர். அதில் மொஹ்மந்த் ஏஜென்சி பகுதியின் தலிபான் தலைவர் உமர் காலித் குராஷானி பேசியிருந்ததாவது: “சிறைப்பிடித்து வைத்திருந்த தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர் களை பாகிஸ்தான் ராணுவத்தினர் கொன்றுள்ளனர். அதற்கு பழி வாங்கும் விதமாகவே 23 ராணுவ வீர்களை கொன்றுள்ளோம்.
ஒருபுறம் பேச்சுவார்த்தையில் ஆர்வம் உள்ளதுபோல் காட்டிக் கொள்ளும் அரசு, மறுபுறம் தலி பான் அமைப்பினரை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. எங்கள் உறுப்பினர்களைக் கொன்றால், அதற்கு எவ்வாறு பழிவாங்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். அரசு தனது செயல்பாட்டை மாற்றிக் கொள்ளாவிட்டால், இதைவிட கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று தெரிவித்துள்ளார்.
23 வீரர்களையும் கொன்றது தொடர்பான வீடியோ காட்சிகளை விரைவில் வெளியிடவுள்ளதாக தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.
தலிபான்களுடன் அரசு நடத்தும் பேச்சுக்கு உதவி புரிந்து வரும் மவுலானா யூசுப் ஷா கூறுகையில், “ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரம், தலிபான் தரப்பு பேச்சு வார்த்தைக் குழு தலைவர் மவுலானா சமியுல் ஹக்கிற்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தலிபான் தலைவர்களுடன் பேசவுள்ள தாகவும், பேச்சு வார்த்தைக் குழு சார்பில் விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்றும் ஹக் கூறியுள்ளார்” என்றார்.