

சிரியா, லிபியா உள்ளிட்ட நாடுகளில் காணப்படும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக கூறி பிறர் ஒப்புதல் இன்றி நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ ஒரு தலைப்பட்சமாக தலையிடுவது கூடாது என்று இந்தியா எச்சரித்துள்ளது,
சண்டைகளை முடிவுக்குக் கொண்டுவரவும் பிராந்தியங்களில் நிலவும் பதற்றத்தை கட்டுக்குள் கொண்டுவரவும் பல்வேறு தரப்பினரையும் இணைத்து தீர்வு காணும் முயற்சிக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
உலக வல்லமை மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை தொடர்பாக மூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் பேசியதாவது:
லிபியா மற்றும் சிரியாவில் நிலவும் கலவர நிலைமையை காரணமாகக் கொண்டு ஒரு தலைப்பட்சமாக தலையிட்டது அபாயகர விளைவுகளை கொடுத்துள்ளது. எனவே பல்வேறு தரப்புகள், அமைப்புகள் மூலமான ஆலோசனைகளை நடத்தி நடவடிக்கைகள் எடுப்பதும், சர்வதேச சமுதாயம் மூலமான செயல்களை பயன்படுத்துவதும் வலுப்படுத்துவதும் அவசியம்.
ஆசியா-பிசிபிக் பகுதியில் பாதுகாப்பு சம்பந்தமான கட்ட மைப்பு வசதியை ஏற்படுத்து வதை விரைவு படுத்தவேண்டும். கடந்த 50 ஆண்டுகளில் ஆசிய, பசிபிக் நாடுகளில், பல்வேறு தகராறுகள், கருத்து வேறு பாடுகள் இருந்தபோதிலும் சண்டைகளைச் சமாளித்து முடிவுக்கு கொண்டுவருவதில் சாமர்த்தியத்தை காட்டியுள்ளன. ஒரு காலத்தில் ஸ்திரம் வாய்ந்த பிராந்தியமாக இருந்த கிழக்கு ஆசியா போன்றவை இப்போது அப்படி இல்லை.
பயங்கரவாதம் உலக அளவில் விரிந்துள்ளதை மத்திய ஆப்பிரிக்கா, சிரியா, லிபியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் காணப்படும் நிலைமை எடுத்துக் காட்டும்.
இந்தியாவில் நல்ல மாற்றம் ஏற்பட அதை சுற்றியுள்ள நாடு களில் சாதக நிலை ஏற்பட வேண்டும் என்பதே இந்தியாவின் முக்கிய நோக்கம். அதற்கு அண்டை நாடுகளில் அமைதி நிலவ வேண்டும். சர்வதேச சூழல் ஸ்திரமானதாக இருக்கவேண்டும். அப்படி நிலைமை வந்தால் அது இந்தியா வின் பாதுகாப்பு, வளர்ச்சி, மேம் பாட்டுக்கு துணையாக இருக்கும். பிராந்தியங்களில் நிலவும் பதற்றம் தணிய வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது என்றார் மேனன்.