

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து சீக்கிய இளைஞரும் அவரது இஸ்லாமிய நண்பர்களும் இறக்கிவிடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களின் தோற்றத்தைக் கண்டு அந்த விமானத்தின் விமானிக்கு உறுத்தலாக இருந்ததால், அவர்கள் வெளியேற்றப்பட்டதாக வெளியான தகவல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவை பூர்விமாகக் கொண்ட சீக்கிய இளைஞர் ஷான் ஆனந்த்தும், 3 முஸ்லிம் இளைஞர்களும் கடந்த மாதம் டொரண்டோவிலிருந்து நியூயார்க்குக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றுகொண்டிருந்தனர்.
அமெரிக்க குடிமக்களான இவர்கள் 4 பேரும் விமானத்தில் அமர்ந்திருந்தபோது, அங்கு வந்த பணிப்பெண், நால்வரையும் விமானத்தை விட்டு இறங்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதற்கான காரணம் குறித்து அவர்கள் பணிப்பெண்ணிடம் கேட்டபோது, அமைதியாக இறங்குமாறும், நுழைவாயிலில் அறிவிப்பு வரும்வரை காத்திருக்குமாறும். இந்த நடவடிக்கை விதிகளுக்கு உட்பட்டே நடப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் இளைஞர்களை இறக்கிவிட்ட விமானம் புறப்பட்டு சென்றுவிட்டது. இதனால் மனஉலைச்சலுக்கு ஆளான 4 பேரும் உரிய இழப்பீடு கேட்டு விமான நிறுவனத்தின் மீது புரூக்ளின் நகர நீதிமன்றத்தில் நேற்று (திங்கள்கிழமை) மனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், மனுவுக்கு பதில் அளித்த விமான நிலைய ஏஜென்ட், "இறக்கிவிடப்பட்ட 4 பேரையும் விமானிக்கும், இதர விமான ஊழியர்களுக்கும் பிடிக்கவில்லை. அவர்கள் இந்த 4 பேரால் மிகவும் சங்கடத்துக்கு ஆளானார்கள். அவர்களை கீழே இறக்கிவிடாவிட்டால் விமானத்தை இயக்க மாட்டோம் என்று கூறினர்" என்று விளக்கம் அளித்துள்ளார்.
இந்த விளக்கத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனம், தனக்கு ஏற்படுத்திய மனஉலைச்சலுக்கு சுமார் 60 கோடியே 20 லட்சம் ரூபாயை (9 மில்லியன் அமெரிக்க டாலர்) இழப்பீடாக தர வேண்டும் என்று மனுதாரர் கோரியுள்ளார்.
இந்தச் சம்பவம் இன வேறுபாடு அதிகமான தாக்கத்தை ஏற்படுத்திவரும் அமெரிக்காவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.