

சீனாவின் கடற்கரை நகரமான குவிங்டாவில் பெட்ரோலியம் பைப்லைன் வெடித்ததில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து குவிங்டாவ் நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
வெய்பாங் நகரில் சீனாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான சினோபெக் (அரசுக்கு சொந்தமானது) பல்வேறு பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளை நிறுவி உள்ளது.
கச்சா எண்ணெய் கிடங்கு அமைந்துள்ள ஹுவாங்டாவ் முதல் வெய்பாங் நகர் வரையில் 176 கி.மீ. நீளத்துக்கு பெட்ரோலியம் பைப்லைன் போடப்பட்டுள்ளது. இந்த லைனின் இடையே குவிங்டாவ் நகரில் கசிவு ஏற்பட்டதால் சப்ளை நிறுத்தப்பட்டது.
வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் கசிவை சரிசெய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, திடீரென தீப்பிடித்து வெடித்தது. இதையடுத்து, விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தினர். கச்சா எண்ணெய் கடலில் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விபத்தில் 35 பேர் இறந்தனர். மேலும் காயமடைந்த 130 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.