

பிரிட்டனில் வெப்பத்தின் காரணமாக பள்ளி மாணவர்கள் சிலர் வித்தியாசமான முறையில் பாவாடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இங்கிலாந்தில் இஸ்கா அகடமி பள்ளியைச் சேர்ந்த உயர் நிலை மாணவர்கள், சமீப காலமாக நிலவி வரும் வெப்ப நிலை காரணமாக பேன்ட்டுக்கு பதிலாக அரைகால் டவுசர் அணிய பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டுள்ளனர்.
ஆனால் இதற்கு பள்ளி நிர்வாகம் அனுமதி வழங்க மறுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் குட்டைப் பாவாடை அணிந்து பள்ளியின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குட்டைப் பாவாடை வெள்ளை நிறச் சட்டையுடன் மாணவர்கள் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து டிவான் கவுண்டி கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது," சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு குட்டைப் பாவாடை அணிந்து வந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மாணவர் எவருக்கும் பள்ளி நிர்வாகம் எந்த தண்டனையும் அளிக்கவில்லை" என்றார்.
மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏமி மிட்செல் கூறும்போது, "அரை கால் டவுசர்கள் எங்களது பள்ளி சீருடையில் அனுமதிக்கப்படுவதில்லை. இது தொடர்பாக மாணவர்களிடமும் அவர்களது பெற்றோரிடமும் பேச இருக்கிறோம். இன்னும் சில தினங்களில் வெப்பநிலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மாணவர்களின் கோரிக்கை எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.