

ஆப்கானிஸ்தானில் உணவு விடுதி ஒன்றின் மீது தலிபான்கள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 13 வெளிநாட்டவர்கள் உள்பட மொத்தம் 21 பேர் உயிரிழந்தனர். இதில், சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) பிரதிநிதியும் பலியானார்.
லெபானன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் நடத்திவந்த உணவு விடுதி மீது, தலிபான் பயங்கரவாதி தற்கொலைப்படைத் தாக்குதலை நடத்தினார். இதில், 5 பெண்கள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.
உணவு விடுதி மீது மூன்று பயங்கர வாதிகள் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கு தல் நடத்தினர். பயங்கரவாதிகளுள் ஒருவர் உடலில் கட்டிக்கொண்டு வந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். மேலும் இருவர் துப்பாக்கியால் வாடிக்கை யாளர்களை நோக்கிச் சுட்டனர். தாக்குதலில் இருந்து தப்பிக்க வாடிக்கையாளர்கள் மேஜைகளுக்கு அடியில் பதுங்கினர். ஆனாலும், குண்டு வெடித்ததால் உயிர்ச்சேதம் அதிகமானது.
உணவு விடுதி உரிமையாளர் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டுள்ளார். ஆனால், அவரும் பயங்கரவாதிகளின் குண்டுக்குப் பலியானார்.
உயிரிழந்தவர்களில் பிரிட்டன் மற்றும் கனடாவைச் சேர்ந்த தலா இருவர், லெபானன் நாட்டைச் சேர்ந்த சர்வதேச செலாவணி நிதியத்தின் பிரதிநிதி ஆகியோர் அடங்குவர். ஐ.நா. அலுவலர்கள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் எந்த நாட்டவர் என்பது குறித்த விசாரணை நடக்கிறது. இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், “இத்தாக்குதலில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் காய மடைந்துள்ளனர்” என்றார்.
இத்தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “பொதுமக்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்களை ஏற்றுக் கொள்ள முடியாது.
இது சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறும் செயலாகும்” என அவர் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதலுக்கு தலிபான்கள் உடனடியாகப் பொறுப்பேற்றுள்ளனர். தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஷபியுல்லா முஜாகித் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க விமானப் படையினர் பர்வான் மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.