

இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கைது விவகாரத்தால் இருநாட்டு உறவு பாதிக்கப்படாது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தேவயானி பணியாற்றி வருகிறார். தனது வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த சங்கீதாவுக்கு விசா பெற்ற போது போலியான ஆவணங்கள், தகவல்களை தேவயானி அளித்த தாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் பணிப்பெண் சங்கீதாவுக்கு மிகக் குறைவான ஊதியம் வழங்கியதாகவும் அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கடந்த வியாழக்கிழமை தேவயானியை கைது செய்த நியூயார்க் போலீஸார், அவரை கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ரூ.1.5 கோடி பிணைத்தொகையில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவத்துக்கு இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. துணைத் தூதரை கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று அமெரிக்காவை இந்திய அரசு கடுமையாகக் கண்டித்துள்ளது.
இதுதொடர்பாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் நான்ஸி பாவலை டெல்லியில் உள்ள தனது அலுவலகத்துக்கு வரவழைத்த இந்திய வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங் அவரிடம் நேரடியாக கண்டனம் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தால் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.அமெரிக்கா விளக்கம் இதுதொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நீண்டகால உறவு உள்ளது. துணைத் தூதர் கைது விவகாரத்தில் உறவு பாதிக்கப்படாது என்று கூறினார்.
இந்திய துணைத் தூதர் மீதான விசா மோசடி வழக்கு தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்ட அவர், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் கருத்து தெரிவிக்க முடியாது என்று தெரிவித்தார்.
வளைந்து கொடுக்காத வல்லரசு விசா விவகாரங்களில் அமெரிக்கா ஆரம்பம் முதலே மிகவும் கண்டிப்புடன் செயல்பட்டு வருகிறது. அண்மையில் இன்போசிஸ் நிறுவனம் விசா மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அந்த நிறுவனம் சுமார் ரூ.2,000 கோடியை அபராதமாக அளித்து பிரச்சினைக்குத் தீர்வு கண்டது.
இதேபோல் இந்திய மென்பொருள் நிறுவனங்கள், தனிநபர்களின் விசா விவகாரங்கள், பாதுகாப்பு நடைமுறைகளில் அமெரிக்கா கடும் கெடுபிடியுடன் செயல்படுகிறது.
மேலும் இந்திய தூதரக அதிகாரிகள், பணிப்பெண்களை கொடுமைப்படுத்துவதாக அடிக்கடி புகார்கள் எழுகின்றன. ஏற்கனவே, பிரபு டாயல், நீனா மல்ஹோத்ரா ஆகிய தூதரக அதிகாரிகள் மீது இதே குற்றச்சாட்டுகள் எழுந்தன.
3-வது நபராக தேவயானி கோப்ரகடே மீது அவரது வீட்டில் வேலை செய்த பணிப்பெண் இப்போது புகார் கொடுத்துள்ளார். இந்தப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தேவயானியை அமெரிக்க போலீஸார் கைது செய்ததாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் செயலுக்கு இந்திய அரசு நேரடியாக கண்டனம் தெரிவித்துள்ள போதிலும் தேவயானி மீதான நடவடிக்கை இதுவரை கைவிடப்படவில்லை. அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழிவகை உள்ளது.
இந்த வழக்கில் தேவயானிக்கு எதிராக தீர்ப்பு அமைந்து அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டால் இந்தியாவுக்கு பெரும் சோதனையாக அமையக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.