

அமெரிக்க விமானப் படையின் அணு ஆயுத ஏவுகணைப் பிரிவுக்கான திறனறி தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக புகார் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அதில் தொடர்புடைய 34 அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, சட்டவிரோதமாக விமானப்படை அதிகாரிகள் போதைமருந்து வைத்திருந்ததாக வெளியான புகாரை விசாரிக்கும்போதுதான் தேர்வில் முறைகேடு நடந்த விவகாரம் அம்பலமானதாக விமானப்படை செயலர் டெபோரா லீ ஜேம்ஸ் தெரிவித்தார்.
தேர்வில்தான் முறைகேடு நடந்ததே தவிர அணு ஆயுதங்கள் பத்திரமாக உள்ளன என்றும் அவர் சொன்னார். விமானப்படையின் அணு ஆயுத ஏவுகணை பிரிவில் உள்ளவர்களுக்காக, திடீரென போர் உத்தரவு பிறப்பித்தால் எத்தகைய விழிப்புடன் இருக்கிறார்கள் என்பதற்கான திறனை அறிய அவ்வப்போது தேர்வு நடத்துவது வழக்கம்.
இத்தகைய தேர்வு எழுதிய வர்கள் சிலருக்கு அதிகாரிகள் சிலர் பதிலை அனுப்பியுள்ளனர். மற்றவர்கள், அந்த தகவல் தெரிந்தாலும் அது பற்றி மேலதிகாரிகளுக்கு சொல்ல முன்வரவில்லை. இத்தகைய நடத்தை மீறலில் செகண்ட் லெப்டினென்ட நிலையில் உள்ளவர்களிலிருந்து கேப்டன் அந்தஸ்தில் உள்ளவர்கள் வரை என 34 பேருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த மோசடி கடந்த ஆகஸ்ட், செப்டம்பரில் நடந்தது என்றார் ஜேம்ஸ்.
மான்டானாவில் அணு ஆயுத ஏவுகணை மையம் உள்ளது. அவசர காலத்தில் இந்த மையம் எந்த அளவுக்கு தயாராக உள்ளது என்பதை கண்காணிக்கும் பணியில் 190 அதிகாரிகள் பணியில் உள்ளனர். அதை கணக்கில் கொண்டால் தேர்வு முறைகேட்டில் 20 சதவீதம் பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த மோசடி விமானப் படை யின் நடத்தை நெறிகளுக்கு முற்றிலும் முரணானதாகும். விமானப் படையில் உள்ள சிலர் தவறு செய்துள்ளனர். மற்றபடி அணு ஆயுத திட்டத்துக்கு தோல்வி என இதை கருதிடமுடியாது என்றார் ஜேம்ஸ். முன்னதாக, இந்த தகவலை பகிரங்கப்படுத்தும் முன் பாது காப்பு அமைச்சர் சக் கேகலை நேரில் சந்தித்து மோசடி புகார் பற்றி விவரித்தார் ஜேம்ஸ்.