

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை ஆசியாவின் ஹிட்லர் என்று வடகொரியா வர்ணித்துள்ளது. பிராந்தியத்தில் சமநிலையை பேணுகிறோம் என்ற போர்வையில் தனது நாட்டின் ராணுவ பலத்தை ஷின்சோ அதிகரித்து வருவதாக வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக வடகொரிய அரசு சார்பு பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி விவரம்:
“வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணு ஆயுதங்கள் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக காரணம் காட்டி, தனது நாட்டு ராணுவத்தை விரிவுபடுத்துவதை நியாயப்படுத்தி வருகிறார் ஷின்சோ அபே. ஜப்பான் மீது முன்வைக்கப்படும் சர்வதேச அளவிலான விமர்சனங்களை, வேறு நாட்டின் (வடகொரியா) மீது திசை திருப்ப முயற்சிக்கிறார் ஷின்சோ அபே. பாசிஸ கொள்கையுடைய ஜெர்மனியின் ஹிட்லருக்கும், வடகொரியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஷின்சோ அபேக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை” என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின், ஜப்பானின் அரசமைப்புச் சட்டம் அமைதிக் கொள்கை உடையதாக உருவாக்கப்பட்டது. அந்நாடு, தனது ராணுவத்தை தற்காப்புப் படை என்றே அழைத்து வருகிறது.
ஆனால், சமீப காலமாக வட கொரியா, சீனாவுடனான கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, ஜப்பானின் கொள்கையில் மாற்றம் ஏற்படலாம் எனத் தெரிகிறது. சமீபத்தில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பேசுகையில், “2020-ம் ஆண்டு ஜப்பான் அரசமைப்புச் சட்டத்தை காலத்துக்கு ஏற்ப மாற்ற முடிவு செய்துள்ளோம். இதுவரை தற்காப்புப் படையாக இருந்த ராணுவம், முழு அளவிலான தாக்குதல் திறன்மிக்கதாக மாற்றியமைக்கப்படும். பிராந்திய அளவில் சமநிலையை பேணுவதற்காக இந்த மாற்றம் அவசியமாகிறது” என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.