

12 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்து கொண்ட 24 வயது காஷ்மீர் ‘ஸ்னோ ஷூ ரேஸ்’ விளையாட்டு வீரர் தன்வீர் ஹுசைன் அமெரிக்கப் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் செயலர் வஹீத் உர் ரஹ்மான் இந்தச் செய்தியை ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழிடம் உறுதி செய்தார்.
ஜம்மு காஷ்மீர் வங்கி ஊழியரான தன்வீர் ஹுசைன் நியூயார்க்கில் சரநாக் ஏரி கிராமத்திற்கு ஸ்னோ ஷூ ரேஸ் விளையாட்டுக்காகச் சென்றுள்ளார்.
“தன்வீர் ஹுசைன் என்பவர் பாலியல் அத்துமீறலுக்காகவும் சிறுமியின் வாழ்க்கைக்கு அபாயகரமாகத் திகழ்ந்தார் என்ற குற்றச்சாட்டிலும் புதனன்று கைது செய்யப்பட்டுள்ளார்” என்று நார்த் கண்ட்ரி பப்ளிக் ரேடியோ.ஆர்க் இணையதளம் தெரிவித்துள்ளது.
திங்களன்று 12 வயது சிறுமியிடம் தன்வீர் ஹுசைன் அத்துமீறியதாக புகார் எழுந்தது. இது குறித்து போலீஸ் அறிக்கையை மேற்கோள் காட்டி அமெரிக்க நாளிதழ் தெரிவிக்கும் போது, “12 வயது சிறுமிக்கு தகாத முறையில் முத்தம் கொடுத்துள்ளார். மேலும் அந்தரங்கமான இடத்தில் தொட்டதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் பலவந்தப்படுத்தியதாகப் புகார் இல்லை. இருவருக்குமிடையேயான வயது வித்தியாசத்தினால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரியில் தி இந்து (ஆங்கிலம்) வெளியிட்ட செய்திகளின் படி 2 காஷ்மீரி வீரர்களுக்கு அமெரிக்கா விசா மறுத்ததாக வெளியிட்டது, ஆனால் இதனை அமெரிக்க நிர்வாகம் மறுத்தது. விசா மறுக்கப்பட்டதாக கூறப்பட்டவர்களில் தற்போது கைது செய்யப்பட்ட ஹுசைனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.