

வங்கதேச தலைநகர் வடக்கு கிஷோர்கஞ்ச் மாவட்டத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகைக்காக 2 லட்சம் பேர் கூடியிருந்த மைதானத்தின் அருகே இன்று (வியாழக்கிழமை) காலை குண்டு வெடித்தது. இதில் போலீஸார் தீவிரவாதிகளுடன் தைரியமாக சண்டையிட்டிருக்கா விட்டால் பேரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்று வங்கதேச உள்துறை அமைச்சர் ஆசாதுஸ்மான் கான் தெரிவித்துள்ளார்.
வங்கதேச தலைநகர் டாக்காவில் நட்சத்திர விடுதி ஒன்றில் கடந்த வாரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இன்று ரம்ஜான் தொழுகை நடந்த இடத்தருகே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது குறித்து வங்கதேச தகவல் அமைச்சர் ஹசன் ஹக் இனு கூறும்போது, "தீவிரவாதிகள் சிறப்பு தொழுகை நடந்த இடத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காவல் வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒரு போலீஸ்காரர் உட்பட இருவர் பலியாகியுள்ளனர்" என்றார்.
இந்நிலையில் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் உள்துறை அமைச்சர் ஆசாத்துஸ்மான் கான் கூறும்போது, “நான் இன்னமும் கூறுவேன், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உள்நாட்டு தீவிரவாதிகளே. அவாமி லீக் அரசை சீர்குலைக்கவே இவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூலமே இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தாக்குதல்கள் ஒரேமாதிரி அமைந்திருப்பதன் மூலம் என்னால் கூற முடியும் இவர்கள் உள்நாட்டுக்காரர்களே.
ஆனால் போலீஸார் அபாரமாக, தைரியமாக தீவிரவாதிகளை எதிர்கொண்டனர். ஈத்கா மைதானத்தில் லட்சக்கணக்கில் தொழுகைக்காக மக்கள் கூடிவரும் நிலையில், தீவிரவாதிகளை சுமார் 1 கிமீ முன்னதாகவே போலீஸார் தடுத்து நிறுத்திச் சண்டையிட்டனர். போலீஸார் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்கிய போதும் பின்வாங்காமல் போலீஸார் சண்டையிட்டனர். இதன் மூலம் அவர்களை மைதானத்தின் பக்கம் வரவிடாமல் செய்தனர். இதன் மூலம் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர், இல்லையெனில் பேரிழப்பு ஏற்பட்டிருக்கும்.
தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம், உள்நாட்டு சதியா, அயல்நாட்டு தூண்டுதலா என்பது விசாரணையின் முடிவில் தெரியும்” என்றார்.