

தீவிரவாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தான் தோல்வி அடைந்துவிட்டதால், அந்நாட்டுக்கு வழங்கப்பட்ட முக்கிய கூட்டாளி நாடு என்ற அந்தஸ்தை திரும்ப பெற வலியுறுத்தி அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2004-ல் அல்-காய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் பாகிஸ்தானின் உதவியை பெறுவதற்காக அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ், அந்நாட்டுக்கு முக்கிய கூட்டாளி நாடு என்ற அந்தஸ்தை வழங்கினார். அமெரிக்காவின் நவீன ராணுவ ஆயுதங்களை வாங்கும் தகுதி இந்த அந்தஸ்தை பெற்ற நாடுகளுக்கு மட்டுமே உண்டு. தவிர, அமெரிக்காவின் கடன் உத்தரவாத திட்டமும் அந்நாடுகளுக்கு கிடைக்கும்.
இந்நிலையில் தீவிரவாதத்தை ஒடுக்கும் விவகாரத்தில் பாகிஸ்தான் தோல்வியை தழுவியதால், அந்நாட்டுக்கு வழங்கப்பட்ட முக்கிய கூட்டாளி அந்தஸ்தை திரும்ப பெறுவதற்கான மசோதாவை, அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சி எம்.பி. டெட் போ மற்றும் ஜனநாயக கட்சி எம்.பி. ரிக் நோலன் இருவரும் அறிமுகம் செய்தனர்.
பின்னர் பேசிய டெட் போ, ‘‘பாகிஸ்தானின் கரங்களில் அமெரிக்காவின் ரத்தக் கறை படிந்துள்ளது. இதற்கு அந்நாடு பதில் சொல்லியே தீர வேண்டும். கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்காவுக்கு நட்புக் கரம் நீட்டுவது போல பாகிஸ்தான் நடித்து வருகிறது. உண்மையில் அந்நாடு பெனடிக்ட் அர்னால்டு போலவே நடந்து கொண்டுள்ளது. ஒசாமாவுக்கு அடைக்கலம் கொடுத்தது, தலிபான் தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக ஆதரவு அளித்தது என பல்வேறு துரோகங்களை செய்துவிட்டது’’ என்றார்.
அமெரிக்காவில் புரட்சிப் போர் வெடித்தபோது, ராணுவ தளபதியாக இருந்த பெனடிக்ட் அர்னால்டு என்பவர் நாட்டுக்காக போரிடுவது போல நடித்து, பிரிட்டன் ராணுவத்துக்கு உதவி புரிந்து வந்தார். இதனால் துரோகம் அல்லது தேச துரோகத்துக்கு அமெரிக்கர்கள் பெனடிக்ட் அர்னால்டு என சொல்வது வழக்கம்.
இந்த புதிய மசோதா நிறைவேற்றப்பட்டால் பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என்றும், இதுவரை அமெரிக்கா வழங்கி வந்த நிதி உதவிகளும் நிறுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.