

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ஐ.நா. ராணுவ பார்வையாளர்கள் வாகனம் மீது இந்தியப் படைகள் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் முன்வைத்த குற்றச்சாட்டை ஐ.நா. திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது குறித்து ஐ.நா. பொதுச் செயலாலர் அண்டோனியோ குட்டர்ஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெபானி டூஜாரிக், "இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் இயங்கும் ஐ.நா. ராணுவ பார்வையாளர்கள் குழுவின் வாகனத்தை காஞ்சார் செக்டாரில் இந்திய ராணுவத்தினர் தாக்கியதாக பாகிஸ்தான் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. யாருக்கும் காயமும் ஏற்படவில்லை" என்றார்.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ஐ.நா. ராணுவ பாதுகாப்புக் குழுவானது இருக்கத் தேவையில்லை. சிம்லா ஒப்பந்தத்துக்குப் பிறகும் இருநாட்டு எல்லையில் ஐ.நா., பார்வையாளர்க் குழு இருப்பது அவசியமற்றது என இந்தியா தொடர்ந்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது.