

அமெரிக்கா கலிபோர்னியா மாகாணம் பால்ம் டெசர்ட் பகுதியைச் சேர்ந்தவர் வெர்னான் மேநார்டு.
இவர் தனது 100ஆவது பிறந்த நாளை கடந்த திங்கள்கிழமை கொண்டாடினார். 100ஆவது பிறந்தநாளுக்கு என்ன செய்ய விருப்பம் என அவரது நண்பர்களும் உறவினர்களும் கேட்டனர்.
அவர் அப்படியொரு விருப்பத்தைச் சொல்வார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. விமானத்திலிருந்து 10 ஆயிரம் அடி உயரத்துக்கு மேலிருந்து பாரசூட் மூலம் குதிக்க வேண்டும் என தன் விருப்பத்தை வெளியிட்டார்.
அவர் விருப்பத்தை நண்பர்களும் உறவினர்களும் நிறைவேற்றினர். அமெரிக்க பாரசூட் அசோசியேசன் உதவியுடன் வெர்னான் மேநார்டுக்குப் போதிய பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் மருத்துவர் அனுமதி பெறப்பட்டது.
தென்கிழக்கு லாஸ்ஏஞ்சலீஸ் பகுதியில் விமானத்திலிருந்து 13 ஆயிரம் அடி உயரத்திலிருந்து குதித்துத் தன் நீண்டநாள் ஆசையைப் பூர்த்தி செய்து கொண்டார் வெர்னான்.
வெர்னானுடன் அவரின் உறவினர் இருவர் மற்றும் ஸ்கை டைவ் பயிற்சியாளர்களும் 13 ஆயிரம் அடி உயரத்திலிருந்து வானில் பறந்து சாகசத்தில் ஈடுபட்டனர்.
வாழ்நாளில் ஒருமுறையேனும் வானில் பாரசூட் உதவியுடன் பறக்க வேண்டும் என்ற வெர்னாடின் ஆசை ஒருவழியாக நிறைவேறியது.
அடுத்து தன் 101 ஆவது பிறந்த நாளை எப்படிக் கொண்டாடுவது என யோசித்து வருகிறாராம் இந்த துணிச்சல்கார தாத்தா.