

இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் பதவியிலிருந்து சி.வி.விக்னேஸ்வரன் நீக்கப்படமாட்டார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் (டிஎன்ஏ) மூத்த தலைவர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.
அமைச்சர்கள் மீது ஊழல் புகார் எழவே அது குறித்து விசாரிப்பதற்காக முதல்வர் விக்னேஸ்வரன் கடந்த ஆண்டு ஒரு குழுவை அமைத்தார். இக்குழு கடந்த வாரம் சமர்ப்பித்த அறிக்கையில் 2 அமைச்சர்கள் மீதான புகாருக்கு ஆதாரம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது..
இதையடுத்து, வேளாண் அமைச்சர் பி.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் டி.குருகுலராஜா ஆகிய இருவரையும் முதல்வர் விக்னேஸ்வரன் பதவி நீக்கம் செய்தார். இதையடுத்து, தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
வடக்கு மாகாண கவுன்சிலில் மொத்தம் உள்ள 38 உறுப்பினர் களில் 22 பேர் விக்னேஸ்வரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இவர்கள் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருமாறு ஆளுநர் ரெஜினால்டு கூரேயிடம் கடந்த 15-ம் தேதி கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், முதல்வருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பதில் தீர்மானம் ஒன்றை ஆளுநரிடம் வழங்கி உள்ளனர். அதில் 15 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக நேற்று முன்தினம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
டிஎன்ஏ மூத்த தலைவரும் வடக்கு மாகாண கவுன்சில் உறுப்பினருமான எம்.கே.சிவாஜி லிங்கம் நேற்று கூறும்போது, “முதல்வர் பதவியிலிருந்து விக்னேஸ்வரன் நீக்கப்பட மாட்டார் என ஆளுநர் தெரிவித்தார். டிஎன்ஏ கூட்டணியில் உள்ள 4 கட்சிகளும் அவருக்கு ஆதரவாக உள்ளன. எனவே, அவர் முதல்வர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார்” என்றார்.